தமிழ்நாடு செய்திகள்

மாநிலங்களவை எம்.பி. பதவி - தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

Published On 2025-05-28 10:28 IST   |   Update On 2025-05-28 15:00:00 IST
  • அடுத்த மாதம் 19-ந்தேதி மேல்சபை எம்.பி. தேர்தல் நடைபெற உள்ளது.
  • வழக்கறிஞர் பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் தேர்தலில் வெற்றி பெறுவது உறுதியாகி உள்ளது.

சென்னை:

பாராளுமன்ற மேல்சபையில் எம்.பி.க்களாக இருக்கும் எம்.பி.க்களில் தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா, ம.தி.மு.க.வின் வைகோ, அ.தி.மு.க.வை சேர்ந்த சந்திரசேகரன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

இதையடுத்து புதிய 6 மேல்சபை எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் நேற்று தேர்தல் அட்டவணையை வெளியிட்டது. அதன்படி அடுத்த மாதம் (ஜூன்) 19-ந்தேதி மேல்சபை எம்.பி. தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2-ந்தேதி தொடங்க உள்ளது.

இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர்களாக போட்டியிட உள்ள பிரமுகர்கள் பெயர்களை தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

அடுத்த மாதம் (ஜூன்) 19-ந்தேதி அன்று நடைபெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் தி.மு.க.வின் சார்பில் போட்டியிடும் 4 இடங்களில், 3 இடங்களுக்கு தி.மு.க. வேட்பாளர்களும், மற்றும் உள்ள ஒரு இடத்திற்கு ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடமும் ஒதுக்கப்படுகிறது.

தி.மு.க. வேட்பாளர்களாக 1. வக்கீல் பி.வில்சன் 2. எஸ்.ஆர்.சிவலிங்கம், 3. ரொக்கையா மாலிக் (என்கிற) கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்படுகிறது.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

Tags:    

Similar News