தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க.விற்கு இரட்டை இலக்க தொகுதிகள்?- வைகோ விளக்கம்
- இரட்டை இலக்க என்கிற வார்த்தை கூட என் வாயில் இருந்து வரவில்லை.
- மதிமுக 12 தொகுதிகளை கோருகிறது என்று தலைப்புச் செய்தியாக போட்டுவிட்டீர்கள்.
சென்னை எழும்பூரில், மதிமுக சார்பில் அதன் தலைவர் வைகோ தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
அப்போது அவர் கூறியதாவது:-
திமுக கூட்டணியில் இரட்டை இலக்க தொகுதிகளை நான் கேட்கவே இல்லையே. பொய்களை பரப்புவதற்கு என்றே ஒரு கூட்டம் இருக்கிறது.
கூட்டத்தின்போது அந்த ஒன்றரை மணி நேரத்தில் இரட்டை இலக்க என்கிற வார்த்தை கூட என் வாயில் இருந்து வரவில்லை.
அங்கீகாரம் வேண்டும் என்றால் 8 சட்டமன்ற உறுப்பினர்களாவது ஜெயிக்க வேண்டும். அதன் அடிப்படையில் 12 தொகுதிகள் கேட்கலாம். ஆனால், அதுகூட என்னுடைய முடிவு அல்ல. தலைமைக் கழகம்தான் தீர்மாணிக்கும் என்று முதன்மைச் செயலாளர் பதில் அளித்தார்.
ஆனால், இரட்டை இலக்க மட்டும் எடுத்துக்கொண்டு செய்தியாளர்கள் மதிமுக 12 தொகுதிகளை கோருகிறது என்று தலைப்புச் செய்தியாக போட்டுவிட்டீர்கள்.
8 தொகுதியில் ஜெயிச்சா தான் அங்கீகாரம் கிடைக்கும் என்றால் அதைவிட கூடுதலாக கேட்போம் என்று பொதுக்குழுவில் கூறினோம். ஆனால், அதுகுறித்து எதுவும் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.