முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
- தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் 76 பேரும் கூட்டத்துக்கு வந்து இருந்தனர்.
- கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
சென்னை:
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2026) தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலை எதிர்கொள்ள அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன.
இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க.-பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவற்றுக்கு இடையே 4 முனை போட்டி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களுக்கு மேல் இருந்தாலும் இப்போதே தேர்தல் பணிகளை தி.மு.கவும், அ.தி.மு.க.வும் தொடங்கி விட்டன. குறிப்பாக பூத் கமிட்டி ஏஜெண்டுகளை தயார்ப்படுத்தும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
நடிகர் விஜய்யும் பூத் கமிட்டி மாநாடுகளை நடத்தி தமிழக வெற்றிக் கழக தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். இதனால் தேர்தல் களம் விறுவிறுப்பாக தொடங்கி இருக்கிறது.
இந்த நிலையில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா, கனிமொழி, திருச்சி சிவா.
அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் உள்பட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் 76 பேரும் கூட்டத்துக்கு வந்து இருந்தனர்.
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இது தொடர்பாக மாவட்ட செயலாளர்களுக்கு விளக்கம் அளித்து துணை பொதுச்செயலாளர்கள் பேசுகிறார்கள்.
இதைத் தொடர்ந்து தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பேசுகிறார்.