தொகுதி பங்கீடு தொடர்பாக தி.மு.க. - காங்கிரஸ் நாளை பேச்சுவார்த்தை
- அண்ணா அறிவாலயத்தில் கடந்த 22-ந்தேதி கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க. பேச்சுவார்த்தையை தொடங்கியது.
- தி.மு.க. தரப்பில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் அதனை எதிர்கொள்வதற்கான அனைத்து பணிகளிலும் தீவிரமாக இறங்கியுள்ளது.
ஆளுங்கட்சியான தி.மு.க. தங்கள் கூட்டணியில் ஏற்கனவே இருக்கும் கட்சிகளை தக்க வைக்கவும், புதிய கட்சிகளை கூட்டணியில் இணைக்கவும் வேலைகளை செய்து வருகிறது. அப்படியாக கூட்டணிக்கு வரக்கூடிய கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தும் வகையில், ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் தரப்பில் குழுக்களை அமைத்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.
தி.மு.க. தரப்பில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில், முதன்மை செயலாளர் கே.என்.நேரு. துணைப் பொதுச் செயலாளர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் எ.வ.வேலு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகிய 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
தொகுதி பங்கீடு தொடர்பாக அண்ணா அறிவாலயத்தில் கடந்த 22-ந்தேதி கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க. பேச்சுவார்த்தையை தொடங்கியது.
முதல் கட்சியாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் தி.மு.க. பேச்சுவார்த்தையை தொடங்கியது. இதுவரை முஸ்லிம் லீக், ம.தி.மு.க., ம.ம.க. ஆகிய கட்சிகளுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி உள்ளது.
இந்நிலையில் தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் நாளை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.