தமிழ்நாடு செய்திகள்

நகைக்கடன் நிபந்தனைகளை கைவிட வலியுறுத்தி 30ஆம் தேதி தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக விவசாய அணி

Published On 2025-05-27 19:27 IST   |   Update On 2025-05-27 19:27:00 IST
  • தனியாரிடம் வாங்கிய தங்க காசுகளுக்கு கடன்பெற முடியாது.
  • ஏற்கனவே வாங்கி நகை கடனை முழுமையாக செலுத்தியவர்களுக்கு மட்டுமே புதிய நகை கடன் வழஙகப்படும்- ஆர்பிஐ.

தி.மு.க. விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தான் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதலே ஒன்றிய பாஜக அரசு கார்ப்ரேட் கம்பெனிகளுக்கு ஆதரவான கொள்கைகளையே அமல்படுத்தி, விவசாயிகள்– தொழிலாளர்கள்– ஏழை மக்களை மென்மேலும் பாதிக்கும் கொள்கைகளையே செயல்படுத்தி, சொல்லொணா துயரத்தில் ஆழ்த்தி வருகிறது.

தேசிய வங்கிகளில் சாமானிய மக்களுக்கும் விவசாயிகளுக்கு கடன் வழங்காமல், பெரும் நிறுவனங்களுக்கு கடன்களை அள்ளி வழங்கி, பல லட்சம் கோடி ரூபாய் கடன்களை வாராக் கடன் என்று சொல்லி ஒன்றிய பாஜக அரசு தள்ளுபடி செய்கிறது. சாமானிய மக்களின் வரிப்பணமான பல லட்சம் கோடி ரூபாய் வரிச் சலுகைகளையும் பணக்காரர்களுக்கு வழங்கி வருகிறது மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு.

விவசாயிகள், ஏழை மக்கள், நடுத்தர மக்கள் தங்களிடம் உள்ள நகைகளை கூட்டுறவு மற்றும் வங்கிகளில் அடமானம் வைத்து விவசாய மற்றும் அவசரத் தேவைகளுக்காக பயன்படுத்தி வந்தனர். அடகு வைத்த நகையை திருப்ப முடியாத மக்கள் வட்டியை மட்டும் கட்டி மறுஅடமானம வைப்பதும் நடைமுறையில் இருந்து வருகிறது.

தற்போது ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையான இந்திய ரிசர்வ் வங்கி, "இனிமேல் வங்கிகளில் நகை கடன் பெற வேண்டுமெனில் நகை வாங்கிய ரசீது அல்லது தகுந்த ஆவணம் தர வேண்டும், தனியாரிடம் வாங்கிய தங்க காசுகளுக்கு கடன்பெற முடியாது, ஏற்கனவே வாங்கி நகை கடனை முழுமையாக செலுத்தியவர்களுக்கு மட்டுமே புதிய நகை கடன் வழஙகப்படும், விவசாயிகளுக்கு நகையை புதுப்பித்து மீண்டும் கடன் பெறுவது தடை செய்யப்பட்டுள்ளது" போன்ற புதிய நிபந்தனைகளை விதித்து விவசாயிகள் – தொழிலாளர்கள் – ஏழை மக்களை வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையான இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ள நகைக் கடன் நிபந்தனைகளை உடனடியாக கைவிட வலியுறுத்தி தி.மு.க. விவசாய அணி மற்றும் அனைத்து விவசாய சங்கங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள் இணைந்து வருகிற 30.5.2025 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் தஞ்சாவூர், தலைமை தபால் நிலையம் எதிரில் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடத்துகிறது.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. விவசாய அணியைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் நிர்வாகிகள் – கழக விவசாய அணித் தோழர்கள் மற்றும் அனைத்து விவசாய சங்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் தி.மு.க. விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News