தமிழ்நாடு செய்திகள்

கேட் கீப்பர் தவறு செய்தது உறுதியானால் நடவடிக்கை எடுக்கப்படும் - கடலூர் ஆட்சியர்

Published On 2025-07-08 09:37 IST   |   Update On 2025-07-08 10:04:00 IST
  • விபத்தில் காயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • ரெயில்வே கேட் கீப்பர் மீது அப்பகுதி பொதுமக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் தெரிவித்தனர்.

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரெயில் மோதியதில் மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில் சிகிச்சைக்கு அழைத்துச்சென்றவர்களில் ஒரு மாணவியும் பலியானார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சம்பவ இடத்தில் கடலூர் ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் நேரில் ஆய்வு செய்தார். இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்துக்கான காரணம் குறித்து ரெயில்வே, காவல்துறை முறையாக விசாரணை நடத்தும்.

கேட் கீப்பர் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்குப்பின் கேட் கீப்பர் தவறு செய்தது உறுதியானால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

செம்மங்குப்பம் அருகே மூடப்படாமல் இருந்த ரெயில்வே கேட் பகுதியில் பள்ளி வேன் கடக்க முயன்ற நிலையில் ரெயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்துக்கு காரணமாக கூறப்படும் ரெயில்வே கேட் கீப்பர் மீது அப்பகுதி பொதுமக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் தெரிவித்தனர்.

எப்போது சென்று கூப்பிட்டாலும் கண்ணை துடைத்துக்கொண்டு தூங்கிய நிலையிலேயே வெளியில் வருவார். விபத்து ஏற்பட்டதும் அழைத்து கேட்டபோது அண்ணா தூங்கிட்டேன் என எழுந்து வந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News