அசைவ உணவு சாப்பிட்ட தம்பதி - திருவண்ணாமலை கோவிலில் பரிகார பூஜை
- அசைவ உணவை சாப்பிட்டு கொண்டு இருந்த நபர், நாங்கள் உள்ளூர் தான் என்று தெரிவித்தார்.
- அருணாசலேஸ்வரருக்கு அதிகாலை கலச பூஜைகள் நடைபெற்றன.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பலத்த சோதனைக்கு பிறகு பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் ராஜகோபுரம் அருகில் உள்ள 5-ம் பிரகாரத்தில் நேற்று கணவன், மனைவியான இருவர் கோவிலின் புனிதத்தை கெடுக்கும் வகையில் அசைவ உணவான முட்டை குஸ்காவை மற்றும் சிக்கன் கிரேவி பார்சல் வாங்கி வந்து இருக்கையில் ஒய்யாரமாக அமர்ந்து சாப்பிட்டனர்.
அவ்வழியாக சென்றவர்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து அவர்கள் கோவில் ராஜகோபுரத்தில் பணியில் இருந்த போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த பெண் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த அசைவ உணவை சாப்பிட்டு கொண்டு இருந்த நபர், நாங்கள் உள்ளூர் தான். தினமும் தான் சாப்பாடு வாங்கி வந்து இங்கு சாப்பிடுவது எல்லாருக்கும் தான் தெரியும். தற்போது கையில் காசு இருந்ததால் முட்டை குஸ்கா வாங்கி வந்து சாப்பிட்டோம் என்று சாதாரணமாக பதில் அளித்தார்.
இதை கேட்டு ஆத்திரம் அடைந்த பெண் அசைவ சாப்பாடு இங்கு வந்து சாப்பிடலாமா என்று எச்சரித்தார். பின்னர் அவர்கள் கோவில் இணை ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு கோவில் நிர்வாக அலுவலர்களால் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர் அவர்களை மேல் விசாரணைக்காக திருவண்ணாமலை டவுன் போலீஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். தம்பதியை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கோவில் வளாகத்தில் இன்று அதிகாலை பரிகார பூஜை செய்யப்பட்டது. அருணாசலேஸ்வரருக்கு அதிகாலை கலச பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து தம்பதி அசைவு உணவு சாப்பிட்ட இடம் உள்ளிட்ட கோவில் வளாகங்களில் புனித நீர் தெளிக்கப்பட்டது.
தம்பதியினர் கோவில் வளாகத்திற்குள் அமர்ந்து அசைவ உணவை சாப்பிடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. இந்த சம்பவம் கோவிலில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.