தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்- பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 6 மாணவிகளுக்கு கவுன்சிலிங்

Published On 2025-01-18 13:45 IST   |   Update On 2025-01-18 15:48:00 IST
  • மனைவியுடன் கைதானவர் தனது மகளின் தோழிகளை மிரட்டியே ஆபாச வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
  • கைதான சிறுமியின் பெற்றோரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

சென்னை:

சென்னையில் பண ஆசையில் பெற்ற மகளையே பெற்றோர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி அதை வீடியோ எடுத்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு வந்த ஒரு புகாரில் சிறுமிகளை ஆபாச வீடியோக்கள் எடுத்து ஒரு கும்பல் பணத்துக்காக சமூக வலைதளங்களில் விற்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இது தொடர்பாக போலீசார் அதிரடி விசாரணையில் இறங்கினார்கள்.

சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து போலீசார் தங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அப்போது தன்னுடைய மனைவி மூலம் மகளையே பணம் சம்பாதிப்பதற்காக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதோடு அதை ரகசியமாக வீடியோ எடுத்து வந்த திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் அந்த சிறுமியின் பெற்றோரை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

சிறுமியின் தந்தை செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்த போது அந்த சிறுமி மட்டுமல்லாது அவரது பள்ளி தோழிகள் 6 பேரையும் உல்லாசத்துக்கு தள்ளியது தெரியவந்தது. சிறுமிகளை மிரட்டி உல்லாசமாக இருந்ததாக வீடியோவில் இடம்பெற்று இருந்த பட்டினப்பாக்கம் மற்றும் தாம்பரத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்தனர். அவர்கள் போலீசாரிடம் சிறுமியின் ஆபாச புகைப்படங்களை வாட்ஸ்அப் மூலம் விற்றதை தெரிவித்தனர். இவர்கள் 6 மாணவிகளை தவிர மற்ற சிறுமிகளிடமும் இதே போன்ற செயலில் ஈடுபட்டார்களா? என்பது தொடர்பாகவும் விசார ணை நடந்து வருகிறது.

போலீசார் சீரழிக்கப்பட்ட 6 மாணவிகளின் வீடியோக்களை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அந்த மாணவிகளை வீடியோ காட்சி மூலம் அடையாளம் கண்ட போலீசார் அவர்களிடம் ரகசியமாக விசாரணை நடத்தினார்கள். அவர்கள் தாங்கள் மிரட்டப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாக கண்ணீர் மல்க தெரிவித்தனர். அந்த மாணவிகள் இன்னும் அதிர்ச்சியின் பிடியில் இருந்து மீளாமல் இருந்து வருகின்றனர்.

இதை உணர்ந்த போலீசார் அந்த மாணவிகளுக்கு மனரீதியாக தைரியம் கொடுக்கும் வகையில் கவுன்சிலிங் கொடுத்தனர். இதன் மூலம் அந்த மாணவிகளுக்கு கொஞ்சம் அச்ச உணர்வு மீண்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

மனைவியுடன் கைதானவர் தனது மகளின் தோழிகளை மிரட்டியே ஆபாச வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இதே போல பலரையும் அவர் ஆபாச வீடியோ எடுத்து இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டு உள்ளது. இதற்காக வேறு ஒரு செல்போன் எதையும் அவர் பயன்படுத்தினாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான சிறுமியின் பெற்றோரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர். தற்போது பொங்கல் தொடர் விடுமுறை என்பதால் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய இருக்கின்றனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கும் போது இந்த பாலியல் விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது.

இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இந்த பாலியல் வழக்கை நாங்கள் அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் வழக்கு போலத்தான் பார்க்கிறோம். அதனால் இந்த வழக்கில் தீவிரமாக விசாரணை நடத்தி 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய இருக்கிறோம். சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வாங்கி கொடுப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு 80 சதவீத வழக்குகளில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. 

Tags:    

Similar News