டிட்வா புயலால் தொடர்ந்து கொட்டிய மழை... பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் ஆய்வு!
- அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையில் தொடரும் மழை
- முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக உருவெடுத்தது.
இந்தப் புயலுக்கு டிட்வா என பெயரிடப்பட்டது. இந்த டிட்வா புயல் தற்போது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னை கடற்கரையை நெருங்கியிருக்கும் நிலையில், இன்று காலை முதல் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் இந்த டிட்வா புயல் அடுத்து இரண்டு நாட்களுக்கு சென்னை கடற்கரை அருகே நிலை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், இந்த பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்குக் கனமழை நீடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை பாதிப்புகள் குறித்தும், மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் சென்னை ரிப்பன் மாளிகையில் அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.