தமிழ்நாடு செய்திகள்

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழை: குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை

Published On 2025-05-20 09:44 IST   |   Update On 2025-05-20 09:44:00 IST
  • தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் மற்றும் அருவிகள் வறண்ட நிலையிலே காணப்பட்டு வந்தன.
  • பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடையானது விதிக்கப்பட்டுள்ளது.

தென்காசி:

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர் சாரல் மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளுக்கு தற்போது தண்ணீர் வர தொடங்கி உள்ளது.

கடந்த 2 மாத காலங்களாக தென்காசி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கத்தின் காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் மற்றும் அருவிகள் வறண்ட நிலையிலே காணப்பட்டு வந்தன.

இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்து வறண்ட நிலையிலே காணப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த 2 நாட்களாக தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் சாரல் மழையின் காரணமாக நேற்று முதல் குற்றால அருவிகளில் தண்ணீர் கொட்ட தொடங்கியுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி இன்று காலையில் குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது,

மிதமான அளவே குற்றாலம் மெயின் அருவியில் தண்ணீர் கொட்டி வரும் நிலையிலும், மலைப்பகுதிகளில் மழையானது தொடர்ந்து பெய்து வருவதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடையானது விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் மலை குறைந்தவுடன் உடனடியாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் மற்ற அருவிகளான ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி, பழைய குற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் வழக்கம் போல் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான ஜூன் மாதம் முதல் வாரத்தில் சீசன் தொடங்கும் நிலையில் தற்போது முன்கூட்டியே சீசன் தொடங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News