null
சினிமாவை மண்டியிட வைக்க சென்சார் வாரியத்தை பயன்படுத்தும் மோடி அரசு - ஜனநாயகனுக்கு மாணிக்கம் தாகூர் ஆதரவு
- சினிமா மற்றும் கருத்துக்களை கட்டுப்படுத்தும் ஆயுதமாக சென்சார் வாரியம் பயன்படுத்தப்படுகிறது.
- ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய நிறுவனங்கள் மிரட்டல் கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன.
ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன்'. இப்படம் பொங்கலையொட்டி நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்த நிலையில், தணிக்கை சான்றிதழ் இதுவரை வழங்கப்படாததால் படம் நாளை வெளியாகாது என்றும் விரைவில் புதிய வெளியீட்டு தேதி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் பட தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து இருந்தது.
இதனிடையே, 'ஜன நாயகன்' படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக உள்ள 'பராசக்தி' படத்திற்கும் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்காததற்கு அரசியல் காரணமே என்று கூறி பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், சினிமா மற்றும் கருத்துக்களை கட்டுப்படுத்தும் ஆயுதமாக சென்சார் வாரியம் பயன்படுத்தப்படுவதாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஆர்எஸ்எஸ் அமைப்பின் கருத்துக்களைச் பரப்பும் படங்கள் மக்களிடம் எடுபடவில்லை, யாரும் அதை நம்பவும் இல்லை, பார்க்கவும் ஆர்வம் காட்டவில்லை.
இந்தத் தோல்வியைத் துணிச்சலாக எதிர்கொள்ள முடியாத மோடி-ஷா அரசு, இப்போது அதிகாரத்தைப் பயன்படுத்தி சினிமாத் துறையைக் கட்டுப்படுத்தப் பார்க்கிறது. இப்போது அவர்களின் இலக்கில் சினிமாத் துறை சிக்கியுள்ளது
அதிகாரத்தின் முன்பு கலை மண்டியிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது ஜனநாயகம் நிலைத்திருக்க முடியாது. சினிமா மற்றும் கருத்துக்களை கட்டுப்படுத்தும் ஆயுதமாக சென்சார் வாரியம் பயன்படுத்தப்படுகிறது.
அதே நேரத்தில் பாஜக ஆர்எஸ்எஸ்ன் பிரச்சாரங்கள் 'கலாச்சாரம்' என்ற பெயரில் திணிக்கப்படுகின்றன.
ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய நிறுவனங்கள் மிரட்டல் கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன. ED, CBI, IT-ஐ தொடர்ந்து தற்போது சென்சார் வாரியம் கூட எதிர்ப்புகளை மௌனமாக பயன்படுத்தப்படுகிறது.
சினிமாவுக்கு அரசியல் அனுமதி தேவையில்லை, சினிமாவுக்கு அரசியல் அமைப்பு பாதுகாப்பு தேவை என்று கூறியுள்ளார்.
ஏற்கனவே தமிழக அரசியலில் த.வெ.க.வுடன் காங்கிரஸ் இணைய உள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், தற்போது விஜயின் 'ஜன நாயகன்' படத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் குரல் எழுப்பியுள்ளது புதிய சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.