விலையேற்றம் அமலுக்கு வரும்முன்பே தமிழ்நாட்டில், சிகரெட் விலை உயர்வு
- மொத்த விற்பனையாளர்கள் 3 நாட்களுக்கு முன்பே விலையை உயர்த்திவிட்டனர்.
- சிகரெட் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இடம்பெறாததால், பதுக்கலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
சென்னை:
புகையிலைப் பொருட்களுக்கு விதிக்கப்படும் புதிய வரி அடுத்த மாதம் (பிப்ரவரி) 1-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதனால், சிகரெட் விலை கணிசமாக உயரும் சூழல் உருவாகியுள்ளது. மெல்லும் புகையிலை மீதான வரி 25 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாகவும், ஹூக்கா புகையிலை வரி 25 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாகவும், பைப் சிகரெட்டுகளுக்கான புகை கலவைகளின் வரி 60-ல் இருந்து 325 சதவீதமாகவும் உயர்த்தப்பட உள்ளது.
இந்தநிலையில், புதிய விலையேற்றம் அமலுக்கு வருவதற்கு முன்பே தமிழ்நாட்டில் சில கடைகளில் சிகரெட் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. முன்பு ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்ட கோல்டு பில்டர் சிகரெட்டுகள் தற்போது ரூ.12-க்கு விற்கப்படுகின்றன.
அதேபோல, கிங்ஸ் ரூ.20, சிசர் பில்டர் ரூ.10 என ஒரு சிகரெட்டுக்கு 2 ரூபாய் அதிகமாக வைத்து விற்பனை செய்யப்படுகிறது.
இதுதொடர்பாக, டீக்கடைகள் மற்றும் சிறிய கடைகளில் கேட்டபோது, ''மொத்த விற்பனையாளர்கள் 3 நாட்களுக்கு முன்பே விலையை உயர்த்திவிட்டனர். கோல்டு பில்டர் பாக்கெட் (10 சிகரெட்டுகள்) முன்பு ரூ.92-க்கு கிடைத்தது, தற்போது ரூ.97-க்கு வாங்க வேண்டியுள்ளது. பாக்கெட்டில் விலை ரூ.100 என அச்சிடப்பட்டு உள்ளதால், கேள்வி கேட்க முடியவில்லை'' என தெரிவித்தனர்.
சிகரெட் உற்பத்தி நிறுவனங்கள் தரப்பில் அதிகாரப்பூர்வமாக விலை உயர்த்தப்படவில்லை என்றும், சில வியாபாரிகள் சிகரெட்டுகளை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், சிகரெட் அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இடம்பெறாததால், பதுக்கலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.
விலையேற்றம் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வருவதற்கு முன்பே சிகரெட் விலை உயர்ந்துள்ளதால், தமிழ்நாட்டில் புகைப்பிடிப்பவர்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.