தமிழ்நாடு செய்திகள்

'ஜனநாயகன்' பட பேனர் விழுந்து முதியவர் படுகாயம்.. விஜய் ரசிகர் மன்ற தலைவர் உள்பட 3 பேர் கைது

Published On 2026-01-09 07:35 IST   |   Update On 2026-01-09 07:35:00 IST
  • பேனர் விழுந்ததில் அவர் அருகிலிருந்த கழிவுநீர் வாய்க்காலில் தலைக்குப்புற விழுந்து படுகாயம் அடைந்தார்.
  • விஜய் ரசிகர் மன்றத் தலைவர் கில்லி செல்வா, கார்த்திக், அருண்ராஜ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி அரியாங்குப்பம் சோலை கவுண்டர் வீதியை சேர்ந்தவர் தனசேகரன். 64 வயதான இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் கண்ட்ரோலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார்.

இவர் நேற்று முன் தினம் அரியாங்குப்பம் அடுத்த மாஞ்சாலையில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு பைக்கில் திரும்பி வந்துகொண்டிருந்தார்.

அப்போது, ஆர்.கே.நகர் தபால்காரர் வீதியில் அனுமதியின்றி விஜய் ரசிகர்களால் வைக்கப்பட்டிருந்த 'ஜனநாயகன்' பட டிஜிட்டல் பேனர் பலமான காற்றால் சாலையில் சரிந்து விழுந்தது.

அந்த சமயம் சாலையில் பைக்கில் சென்ற தனசேகரன் மீது பேனர் விழுந்ததில் அவர் அருகிலிருந்த கழிவுநீர் வாய்க்காலில் தலைக்குப்புற விழுந்து படுகாயம் அடைந்தார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இது குறித்து தனசேகரனின் மகன் ராஜராஜன் அரியாங்குப்பம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் பேனர் தடைச் சட்டத்தை மீறுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அருந்ததிபுர விஜய் ரசிகர் மன்ற தலைவர் கில்லி செல்வா என்கிற செல்வகணபதி (26 வயது), சண்முகம் நகரை சேர்ந்த கார்த்திக் (24 வயது), அருண்ராஜ் (19 வயது) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மூவரும் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News