தமிழ்தான் அவரின் உயிர் மூச்சு... தந்தை குமரி அனந்தன் குறித்து உருக்கமாக பேசிய தமிழிசை
- கதரை தவிர வேறு எதையும் அணிய மாட்டார்கள்.
- தமிழகத்தில் உள்ள எல்லா தலைவர்களிடமும் கட்சி எல்லை கடந்து மிகவும் அன்பாக பழகக்கூடியவர்.
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரி அனந்தன் (வயது 93) நேற்று இரவு 12.15 மணியளவில் காலமானார். அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது மகள் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.
பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் தமிழ் மொழியையும் தேசியத்தையும் காந்தியத்தையும் வாழ்க்கை முறையாக கொண்ட எனது தந்தை குமரி அனந்தன் அவர்கள் 12.30 மணிக்கு தனது கடைசி மூச்சை தமிழ் மண்ணில் விட்டார்கள்.
அவர்களை பொறுத்தமட்டில் அரசியலில் நேர்மையான அரசியல், துணிச்சலான அரசியல், கொள்கை பிடிப்புள்ள அரசியல், காமராஜரின் தொண்டன் என்பதுதான் எனது மிகப்பெரிய அடையாளம் என்று எப்போதுமே சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.
கதரை தவிர வேறு எதையும் அணிய மாட்டார்கள். உள்ளாடைகள் கூட கதரில்தான் அணிவார்கள். அப்படி கொள்கைகளில் வாழ்ந்தார்கள். அப்படிப்பட்ட என் தந்தை 4 முறை தமிழகத்தில் சட்டமன்றத்தையும் ஒரு முறை பாராளுமன்றத்தையும் அலங்கரித்து இருக்கிறார்கள்.
மொரார்ஜி தேசாய் அவர்கள் ஆட்சி செய்யும்போது பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, முதன்முதலில் தமிழில் பாராளுமன்றத்தில் கேள்வி கேட்டவர். முதல்முதலில் தமிழை பாராளுமன்றத்தில் ஒலிக்கச்செய்தவர். 8 முறை பாத யாத்திரை செய்து இருக்கிறார்கள். தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து இருக்கிறார்கள். இன்னும் எவ்வளவோ சொல்லிக்கொண்டு போகலாம். தமிழ்... தமிழ்... தமிழ்... என்பது மிகவும் அவர்களின் உயிர் மூச்சு.
தமிழகத்தில் உள்ள எல்லா தலைவர்களிடமும் கட்சி எல்லை கடந்து மிகவும் அன்பாக பழகக்கூடியவர். மிகச்சிறந்த பேச்சாளர். அன்பிற் சிறந்தீர் என்று தான் ஆரம்பிப்பார். அப்படி ஆரம்பிக்கும்போதே அதிகமான கைத்தட்டல்களை பெறுவார்.
என் தந்தை சிறுவயது முதல் அவரை பார்த்து வளர்ந்தவள் நான். நான் வேறு இயக்கத்தை தேர்ந்தெடுத்தபோது சற்று கோபமாக இருந்தாலும் பின்பு எங்கே இருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என்று என்னை வாழ்த்தியவர். என்னை உயரத்தில் பார்த்து மகிழ்ந்தவர். இறுதி காலத்தில் இயற்கையோடு இருக்கவேண்டும் என்பதற்காக எங்களோடு தான் இருந்தார். கடைசி காலம் வரை எங்களோடு தான் இருந்தார்.
அவர் மறைந்து விட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அதனால் அவரை 93 வயது பிறந்தநாளையும் கொண்டாடினோம். அவருக்கு இறுதி சடங்கு மாலை 5 மணிக்கு ஊர்வலம் கிளம்பி விருகம்பாக்கம் இடுகாட்டில் நிறைவு செய்கிறோம்.
நிறைவான வாழ்க்கை வாழ்ந்தவர். கடைசி காலத்தில் கூட தமிழக மக்களுக்கு வாழ்த்துகளை சொல்லுங்கள் என்று எங்களுக்கு அறிவுரை சொல்லி எங்களை வளர்த்திருக்கிறார்.
தந்தை என்று இருந்ததை விட நாட்டுக்கு ஒரு தொண்டன் என்ற வகையிலேயே அவருடைய வாழ்க்கை இருந்து இருக்கிறது.
உங்கள் அனைவரின் சார்பிலும் உங்கள் சகோதரியாக அவரின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்று பிரார்த்தித்து ஒரு நல்ல மனிதர், நேர்மையான மனிதர், அரசியலுக்காக எந்த வகையிலும் தனது கொள்கையை விட்டுக்கொடுக்காதவர், நேர்மையை விட்டுக்கொடுக்காதவர், உழைப்பாளி, நல்ல பழக்கவழக்கங்கள் உள்ளவர், 4 மணியில் இருந்து இரவு 11 மணி வரைக்கும் வாழ்க்கையை நேரடியாக நேர்மறையாக நடத்தக்கூடியவர். படிப்பாளி. அந்த காலத்திலேயே 2 எம்.ஏ., படித்து இருக்கிறார்.
புத்தகங்கள் தான் அவருடைய வாழ்க்கை. அப்படிப்பட்ட அப்பாவை இழந்து தவித்துக்கொண்டு இருக்கிறேன். போய் வாருங்கள் அப்பா. அடிக்கடி நான் சொல்வதுண்டு மருத்துவம் தானே படித்து இருக்கிறீர்கள். தமிழ் நன்றாக பேசுகிறீர்கள் என்று கேட்கும்போது, தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை. தமிழ் என்னை பெற்றதனால் நான் தமிழ் பேசுவேன் என்று பெருமையாக என்னை பேச வைத்தவர்.
நேரடியாக என் அப்பா எனக்கு எதுவும் சொல்லிக்கொடுத்ததில்லை. ஆனால் அவருடைய ஒழுக்கத்தையும், நேர்மையையும் பார்த்து பார்த்து வளர்ந்தவள் நான். தேசமும் தெய்வீகமும் எனது 2 கண்கள் என்று சொல்லி வளர்த்தவர். அதனால் தான் இன்றும் நான் தேசியத்தையும் தெய்வீகத்தையும் 2 கண்களாக போற்றிக்கொண்டு இருக்கிறோம். தேச பக்தியும் தெய்வ பக்தியும் உள்ளவர். அவரை இழந்து வாடுகிறோம். ஆனால் துணிச்சலாக இருக்க வேண்டும். தமிழ் பேச வேண்டும். நேர்மையான அரசியல்வாதியாக இருக்க வேண்டும், எதற்கும் தலைகுனிய கூடாது என்ற அவருடைய வாழ்க்கையை பின்பற்றி, அவர் என்னவெல்லாம் தமிழக மக்களுக்கு செய்ய வேண்டும் நினைத்தாரோ அவர் வழியையொட்டி அதை நாங்கள் செய்து முடிப்போம். உங்கள் சகோதரியாக செய்து முடிப்பேன்.
தந்தையை இழந்து வாடும் இந்த நேரத்தில் வந்து ஆறுதலை தந்த உங்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.