வீரப்பன் தேடுதல் வேட்டை - பாதிக்கப்பட்டவர்களுக்கான எஞ்சிய இழப்பீட்டு தொகை விடுவிக்க அரசுக்கு உத்தரவு
- பாக்கி இழப்பீடு தொகையை வழங்க ஆணை பிறப்பித்து ஓராண்டாகியும் அதை அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்பு செயல்.
- பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு என்பது மக்களின் பணம், அரசு பணம் அல்ல.
சந்தனக்கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட தமிழக - கர்நாடக சிறப்பு அதிரடிப்படையினர், விசாரணை என்ற பெயரில் மலை கிராம மக்கள் மீது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன.
புகார்களை விசாரித்த தேசிய மனித உரிமை ஆணையம், அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவின்படி, தமிழக அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஒரு கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கிய நிலையில், பாக்கி தொகை 3 கோடியே 80 லட்சம் ரூபாயை வழங்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழக தலைமை செயலாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், பாக்கி தொகையை வழங்க வேண்டும் எனவும், பயனாளிகள் குறித்த விவரங்களை சேலம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கும்படி, விடியல் மக்கள் நல அறக்கட்டளைக்கு உத்தரவிட்டு இருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில் குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் சேலம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர்களிடம் வழங்கியதாக விடியல் அமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டது குறித்தும், இழப்பீட்டு நிதி ஒதுக்கீடு குறித்தும் அரசு கடிதத்தை தாக்கல் செய்த கூடுதல் தலைமை வழக்கறிஞர், பாக்கி இழப்பீட்டு தொகையை வழங்க 3 வார அவகாசம் வழங்கக் கோரி இருந்தார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மூன்று வாரங்களில் பாக்கி இழப்பீட்டை, பாதிக்கப்பட்டவர்களுக்கு வெளிப்படையான முறையில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்,
இழப்பீடு வழங்க தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்த ஆணைக்கு எதிராக தலைமைச்செயலாளர் வழக்கு தொடர்ந்ததற்கு அதிருப்தி தெரிவித்தது.
பாக்கி இழப்பீடு தொகையை வழங்க ஆணை பிறப்பித்து ஓராண்டாகியும் அதை அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்பு செயல்.
மக்களின் பணத்திற்கு அரசு அறங்காவலர்கள் மட்டுமே. பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு என்பது மக்களின் பணம், அரசு பணம் அல்ல. பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை.
வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய எஞ்சிய இழப்பீட்டு தொகை ரூ.2.59 கோடியை உடனடியாக தமிழக அரசு விடுவிக்க வேண்டும்.
பாக்கி இழப்பீடு தொகை வழங்கியது குறித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது.