முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 28-ந் தேதி கோவில்பட்டி வருகை
- முதலமைச்சர் வரும் சாலையில் புதிதாக தார் ஊற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
- பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இளையரசனேந்தல் ரோட்டில், மின்வாரிய அலுவலகம் எதிரில் கோவில்பட்டி நகர தி.மு.க., அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. அந்த அலுவலகத்தின் முன்பு, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
புதிதாக கட்டப்பட்ட நகர தி.மு.க., அலுவலகம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் வடகிழக்கு பருவமழை காரணமாக நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், வருகிற 28-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவில்பட்டிக்கு வருகை தந்து, நகர தி.மு.க. அலுவலகம் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை திறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையொட்டி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், முதலமைச்சர் திறந்து வைக்க உள்ள தி.மு.க. அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து 29-ந் தேதி (புதன்கிழமை) தென்காசியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
இதற்காக இலத்தூர் விளக்கு பகுதியில் இருந்து ஆய்க்குடி செல்லும் சாலையில் மைதானம் தயார் செய்யப்பட்டு அதில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சில நாட்களாக தென்காசி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில் நிகழ்ச்சி நடைபெறும் பகுதியிலும் கனமழை பெய்ததால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை புரியும் பொதுமக்கள் சிரமம் இன்றி வந்து செல்வதற்காக மழை பெய்தால் தண்ணீர் தேங்காத அளவிற்கு மண் கொட்டப்பட்டும், முதலமைச்சர் வரும் சாலையில் புதிதாக தார் ஊற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
நிகழ்ச்சி நடைபெறும் பகுதிக்கான பிரம்மாண்ட பந்தல் அமைக்கும் பணி தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
இந்நிலையில் பந்தல் பணிகள் நடைபெறுவதை தென்காசி எம்.எல்.ஏ.வும் காங்கிரஸ் மாவட்ட தலைவருமான பழனி நாடார் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் பல கோடி மதிப்பில் பல்வேறு முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தும் புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிட உள்ளார். அதற்கான பணிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் துரிதமாக நடைபெற்று வருகிறது.