சிறுவன் கடத்தல் வழக்கு- ஜெகன் மூர்த்திக்கு முன் ஜாமினை உறுதி செய்து வழக்கை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்
- முன்ஜாமின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
- திருமணம் செய்த இருவரின் வீட்டாரும் சமரசம் செய்துள்ள நிலையில் இணக்கமான சூழல்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காட்டை அடுத்துள்ள களாம்பாக்கத்தில் காதல் விவகாரம் காரணமாக 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவத்தில் கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏ.வான பூவை ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருவாலங்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வந்தது.
இதையடுத்து போலீசார் பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.விடம் அதிரடி விசாரணையை தொடங்கினார்கள். ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.விடம் நடத்தப்படும் விசாரணை விவரங்கள் வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டன.
இதற்கிடையே, காதல் திருமணம் விவகாரத்தில், கட்டப்பஞ்சாயத்து செய்து சிறுவனைக் கடத்திய விவகாரத்தில், ஜெகன் மூர்த்தி முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். முன்ஜாமின் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையில் நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, என்.கோட்டீஸ்வர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்த நிலையில், ஜெகன்மூர்த்திக்கு முன் ஜாமீன் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற விசாரணையில் ஜெகன் மூர்த்திக்கு முன் ஜாமினை உறுதி செய்து, அவர் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது .
திருமணம் செய்த இருவரின் வீட்டாரும் சமரசம் செய்துள்ள நிலையில், பிரச்னைகள் மறைந்து இணக்கமான சூழ்நிலை ஏற்படுகிறது என்று கூறி வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.