தமிழ்நாடு செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Published On 2024-12-05 13:19 IST   |   Update On 2024-12-05 13:21:00 IST
  • மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
  • "விழுதுகள்" என்ற முதல் மறுவாழ்வு சேவை ஊர்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சென்னை:

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவி உபகரணங்கள் திட்டத்தின் பொன் விழா ஆண்டையொட்டி, தமிழ்நாடு முழுவதும் உதவி உபகரணங்கள் வேண்டி விண்ணப்பித்திருக்கும் சுமார் 26,000 நபர்களுக்கு 130 கோடி ரூபாய் மதிப்பில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கான பெட்ரோல் ஸ்கூட்டர்கள் உள்ளிட்ட பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கப்படுகிறது.

அதன் அடையாளமாக இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார். கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு 211 கோடி ரூபாய் செலவில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு சேவைகள் வழங்கிடும் வகையில், மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமையப் பெறவுள்ளன. இம்மையங்களுக்கு நேரடியாக வரமுடியாத மாற்றுத்திறனாளிகளுக்கு "விழுதுகள்" என்ற முதல் மறுவாழ்வு சேவை ஊர்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


இவ்வூர்திகள் நிர்ணயிக்கப்பட்ட வழித்தடங்களில் பயணிக்கும். அவ்வழித்தடங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் தேவைகளுக்கேற்ப இயன்முறை, கேட்டல் மற்றும் பேச்சு பயிற்சி, சிறப்புக் கல்வி ஆகிய மறுவாழ்வு சேவைகள் இவ்வூர்திகளில் வழங்கப்படும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும சிறந்த சாதனை புரிந்த மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக சிறப்பாக சேவை புரிந்தமைக்காக மாநில அளவிலான விருதுகளை 16 நபர்களுக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை, கே.கே. நகரில் உள்ள அரசு புனர்வாழ்வு மருத்துவமனை வளாகத்திற்குள் 15 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புறவுலக சிந்தனையற்ற நபர்களுக்கான ஒப்புயர்வு மையத்தின் சேவைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் இயங்கும் 35 ஆரம்ப நிலை இடையீட்டு மையங்களை மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் மூலம் வலுப்படுத்தி விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையங்களாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

Tags:    

Similar News