புதுக்கோட்டையில் நாளை அரசு விழா: 45 ஆயிரம் பேருக்கு நல உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்
- திருச்சியில் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
திருச்சி:
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் நாளை நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. பழனியாண்டி இல்ல திருமண விழாவில் மணமக்கள் விஜயபாரதி-மனிஷா ஆகியோர் திருமணம் நாளை (ஞாயிறுக்கிழமை) திருச்சி சோமரசம்பேட்டை டாக்டர் கலைஞர் திடலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே களமாவூரில் உள்ள மூகாம்பிகை பொறியியல் கல்லூரியில் நடைபெறும் அரசு விழாவிலும் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) சென்னை சித்தரஞ்சன் பகுதியில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்படுகிறார். தொடர்ந்து, சென்னை விமான நிலையத்திற்கு மாலை 6.10 மணிக்கு வருகிறார். 6.20 மணிக்கு திருச்சிக்கு புறப்படுகிறார். இரவு 7.25 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு வருகிறார். 7.35 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 8.15 மணிக்கு சுற்றுலா மாளிகை வருகிறார். இரவு அங்கு தங்குகிறார்.
முன்னதாக, விமான நிலையத்தில் இருந்து சுற்றுலா மாளிகை வரை அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.45 மணிக்கு சுற்றுலா மாளிகையில் திருச்சி மாவட்டம் சோமரசம் பேட்டைக்கு காலை 9.20 மணிக்கு செல்கிறார். அங்கு திருமண விழாவில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைக்கிறார். பின்னர், காலை 10.20 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு புதுக்கோட்டை செல்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே களமாவூரில் உள்ள மூகாம்பிகை பொறியியல் கல்லூரிக்கு காலை 11.15 மணிக்கு முதலமைச்சர் செல்கிறார். அங்கு நடைபெற உள்ள அரசு விழாவில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று ரூ.201.70 கோடி மதிப்பில் 103 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ரூ.223.06 கோடி மதிப்பில் 577 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கிறார். ரூ.348.43 கோடிக்கு 44 ஆயிரத்து 93 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
நிகழ்ச்சியை முடித்து அங்கிருந்து பகல் 12.15 மணிக்கு புறப்படுகிறார். பகல் 12.45 மணிக்கு திருச்சி பொன்மலையில் உள்ள முதியோர்களுக்கான 'அன்புச்சோலை' திட்டத்தை தொடங்க்கி வைக்கிறார். பின்னர், மதியம் 1 மணியளவில் பொன்மலையில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு செல்கிறார்.
மதியம் 1.30 மணிக்கு விமான நிலையம் வந்தடைகிறார். தொடர்ந்து, பகல் 2.55 மணிக்கு விமானம் மூலம் சென்னைக்கு மாலை 4 மணிக்கு செல்கிறார். முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு, திருச்சியில் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. திருச்சியில் மாநகர காவல் ஆணையர் காமினி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.