தமிழ்நாடு செய்திகள்

சுமூகமாக முடிந்த பேச்சுவார்த்தை? கூடுதல் தொகுதிகளை கொடுக்க முன்வந்த திமுக... காங்கிரஸுக்கு 2 ராஜ்யசபா சீட்?

Published On 2026-03-03 14:54 IST   |   Update On 2026-03-03 14:54:00 IST
  • தே.ஜ.கூட்டணியில் இன்னும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை.
  • திமுக மூன்று தொகுதிகளை கூடுதலாக கொடுக்க முன்வந்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் கட்சிகள் தொகுதிப் பங்கீட்டில் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக தலைமையிலான தே.ஜ.கூட்டணியில் இன்னும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. ஆனால் திமுக தலைமையிலான கூட்டணியில் பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில் நீண்டநாட்களாக இழுபறியில் இருந்த திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு விவகாரம் இன்று முடிவுக்கு வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னதாக இத்தேர்தலில் காங்கிரஸிற்கு 25 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை இடத்தை கொடுக்க திமுக முடிவு செய்தது.

ஆனால் காங்கிரஸ் தரப்பில் 35 - 40 தொகுதிகள் கோரப்பட்டது. இதற்கு திமுக தீர்க்கமாக மறுப்புதெரிவிக்க இழுபறி நீடித்தது. மேலும் பேச்சுவார்த்தைக்காக காங்கிரஸ் அமைத்த குழுவில் இடம்பெற்ற கிரிஷ் சோடங்கர் போன்றோரும் இழுபறிக்கு முக்கிய காரணம். இதனிடையே மார்ச் 5-ஆம் தேதி ராஜ்யசபா வேட்புமனுத் தாக்கலுக்கான கடைசி நாள் என்பதால், அதற்குள் உடன்பாடு எட்டப்பட வேண்டிய கட்டாயம் இரு தரப்பிற்கும் ஏற்பட்டது. 

இதனை உணர்ந்து தொகுதிப் பங்கீட்டில் நிலவும் இழுபறியைத் தீர்க்க, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தனது வியூகத்தை மாற்றியது. இதுவரை பேச்சுவார்த்தை நடத்திய கிரிஷ் சோடங்கருக்குப் பதிலாக, மூத்த தலைவர் ப. சிதம்பரத்தை திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த நியமித்தது. அவரும் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

இந்நிலையில்  காங்கிரஸ் 40 என்ற எண்ணிக்கையில் இருந்து 35க்கு இறங்கி வந்துள்ளதாகவும், திமுக 25+1 என்ற எண்ணிக்கையில் இருந்து ஏறி 29+2 என மூன்று தொகுதிகளை கூடுதலாக கொடுக்க முன்வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இன்று மாலைக்குள் நல்ல செய்திவரும் என திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். இதனால் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததாக தெரிகிறது. விரைவில் தொகுதிகளின் எண்ணிக்கை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  


Tags:    

Similar News