கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்: குற்றவாளிகள் மீது 13 பிரிவுகளில் வழக்கு
- கோவை கூடுதல் மகளிர் கோர்ட்டில் பீளமேடு போலீசார் இ-பைலிங் வாயிலாக 50 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
- தடயங்கள் மற்றும் ரத்த பரிசோதனை, டி.என்.ஏ. பரிசோதனை முடிவுகள் கோர்ட்டுக்கு வந்த பிறகு இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.
கோவை:
கோவை விமான நிலையம் பின்புறம் கடந்த மாதம் 2-ந் தேதி காரில் காதலனுடன் அமர்ந்திருந்த கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக சதீஷ் (வயது 30), கார்த்திக் (21), குணா (20) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசாரை தாக்கி தப்ப முயன்றபோது அவர்களது காலில் துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர். கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள அவர்கள் 3 பேரையும் ஒருநாள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த நிலையில் முதல்கட்ட குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர். கோவை கூடுதல் மகளிர் கோர்ட்டில் பீளமேடு போலீசார் இ-பைலிங் வாயிலாக 50 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.
பி.எஸ்.என். சட்டத்தின் கீழ் கடத்தல், கொலை மிரட்டல், கூட்டுச்சதி, கூட்டு பாலியல் பலாத்காரம், தடயங்களை மறைத்தல், கொலை முயற்சி, கொடுங்காயம் ஏற்படுத்துதல், வழிப்பறி உள்ளிட்ட 13 சட்டப்பிரிவுகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தடயங்கள் மற்றும் ரத்த பரிசோதனை, டி.என்.ஏ. பரிசோதனை முடிவுகள் கோர்ட்டுக்கு வந்த பிறகு இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது. சம்பவம் நடந்து 29-வது நாளான நேற்று முன்தினம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த வழக்கு விசாரணையானது அடுத்தக் கட்டத்துக்கு சென்றுள்ளது. வழக்கு விசாரணை விரைவில் முடிந்து குற்றவாளிகளுக்கான தீர்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது.