இந்தியாவில் மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்- மத்திய அரசு தகவல்
- கடந்த 2014-ம் ஆண்டு நாட்டில் மொத்தம் 387 கல்லூரிகளும், அந்த கல்லூரிகளில் 51 ஆயிரத்து 400 எம்.பி.பி.எஸ். இடங்களும் இருந்தன.
- எம்.பி.பி.எஸ். இடங்களில் 11 ஆயிரத்து 745 எண்ணிக்கையில் கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது
சென்னை:
நாட்டில் எத்தனை பதிவு செய்த அலோபதி டாக்டர்கள் மற்றும் ஆயுஷ் டாக்டர்கள் இருக்கிறார்கள் என்ற விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் தற்போது 13 லட்சத்து 86 ஆயிரத்து 150 அலோபதி டாக்டர்கள் பதிவு செய்துள்ளனர். அதேபோல 7 லட்சத்து 51 ஆயிரத்து 768 ஆயுஷ் டாக்டர்கள் அதாவது ஆயுர்வேதம், சித்தா, யுனானி, இயற்கை மருத்துவ டாக்டர்கள் உள்ளனர். மேலும் நாட்டின் தற்போதைய மக்கள்தொகை அடிப்படையில் 811 பேருக்கு ஒரு டாக்டர்கள் இருக்கின்றனர்.
கடந்த 2014-ம் ஆண்டு நாட்டில் மொத்தம் 387 கல்லூரிகளும், அந்த கல்லூரிகளில் 51 ஆயிரத்து 400 எம்.பி.பி.எஸ். இடங்களும் இருந்தன. ஆனால் 2019-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 536 கல்லூரிகளும், 80 ஆயிரத்து 312 இடங்களும் என உயர்ந்தது. தற்போது 2023-24-ம் ஆண்டில் மிக அதிகளவாக 722 மருத்துவ கல்லூரிகளும், 1 லட்சத்து 10 ஆயிரத்து 297 எம்.பி.பி.எஸ். இடங்களும் இருக்கின்றன.
மேலும் நாட்டிலேயே அதிகபட்சமாக 74 மருத்துவ கல்லூரிகளுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கர்நாடகாவில் 70, மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 68, தெலுங்கானாவில் 56, குஜராத்தில் 40, ஆந்திராவில் 37 என்ற எண்ணிக்கையிலும் உள்ளன.
அதேநேரத்தில் எம்.பி.பி.எஸ். இடங்களில் 11 ஆயிரத்து 745 எண்ணிக்கையில் கர்நாடகம் முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் 11 ஆயிரத்து 650 இடங்கள் உள்ளன. வெறும் 95 இடங்கள் வித்தியாசத்தில் தமிழகம் 2-வது இடத்தை பிடித்துள்ளது. 10 ஆயிரத்து 845 இடங்களுடன் மகாராஷ்டிரா 3-வது இடத்திலும், 9 ஆயிரத்து 903 எண்ணிக்கையில் உத்தரபிரதேசம் 4-வது இடத்திலும் உள்ளது.
இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.