ரேசன் கடைகளில் நாட்டு சர்க்கரை வழங்கப்படும்: பா.ம.க. வேளாண் மாதிரி பட்ஜெட்டில் தகவல்
- நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3500-யையும், கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரமும் நிர்ணயிக்கப்படும்.
- சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலங்களை கையகப்படுத்த தடை விதிக்கப்படும்.
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியின் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டார்.
அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
மாநிலத்தில் மொத்த பட்ஜெட்டில் 25 சதவீதம் வேளாண் துறைக்கு ஒதுக்கப்படும். அனைத்து விளைப் பொருள்களையும் அரசே கொள்முதல் செய்ய கட்டாயம் சட்டம் கொண்டு வரப்படும். விளைப் பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்வதற்காக ஓர் ஆணையம் அமைக்க வேண்டும். விவசாயிகளால் உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் லாபம் சேர்த்து விலை நிர்ணயம் செய்யப்படும். காய்கறி, பழங்கள் ஆகியவற்றுக்கு 3 மாதங்களுக்கு ஒரு முறை விலை நிர்ணயம் செய்யப்படும்.
நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3500-யையும், கரும்பு டன்னுக்கு ரூ.5 ஆயிரமும் நிர்ணயிக்கப்படும். ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 30 ஆயிரம் காவிரி பல்பொருள் அங்காடிகள் அமைக்கப்படும். ரேசன் கடைகளில் நாட்டு சர்க்கரை, நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவை மானிய விலையில் வழங்கப்படும்.
வனவிலங்குகள் தாக்கி உயிரிழப்போருக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். வேளாண்மை துறையில் 50 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். நெல் உற்பத்தி திறனை அதிகரிக்க சிறப்பு திட்டம் கொண்டு வரப்படும்.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறி, பழங்கள், மலர்கள் ஆகியவற்றை வீணாகாமல் பாதுகாக்க அனைத்து வட்டாரங்களிலும் குளிர்சாதன கிடங்குகள் அமைக்கப்படும்.
சிப்காட் தொழிற்பேட்டைக்கு நிலங்களை கையகப்படுத்த தடை விதிக்கப்படும். அதே போல் அரியலூர் மாவட்டத்தில் புதிய சிமெண்ட் தொழிற்சாலைகள், நெய்வேலி சுரங்க விரிவாக்க திட்டம், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் அனைத்து வகை தொழில் திட்டங்களுக்கும் தடை விதிக்கப்படும்.
கோதாவரி-காவிரி, காவிரி-குண்டாறு ஆகிய நதிகள் இணைப்பு திட்டங்கள் நிறைவேற்றப்படும். ஒரு லட்சம் கோடியில் நீர்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும். தமிழ்நாட்டில் 25 இடங்களில் இயங்கும் மணல் குவாரிகள் மூடப்படும். ஊரக வேலைவாய்ப்பு திட்ட வேலை நாட்கள் 150 ஆக உயர்த்தப்படும். அந்த திட்டம் வேளாண்மை பணிக்கும் நீட்டிக்கப்படும்.
திண்டிவனத்தில் வேளாண்மை கல்லூரி மற்றும் தஞ்சாவூர், வேலூர், நெல்லை ஆகிய இடங்களில் 3 புதிய வேளாண் கல்லூரிகள் உருவாக்கப்படும் உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்நிகழ்ச்சியில் ஏ.கே.மூர்த்தி, திலகபாமா, வடிவேல் ராவணன், ஜெயராமன், அருள், அடையாறு வடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட் போட வைத்ததே பா.ம.க.தான். மாநிலம் முழுவதும் இயற்கை வளங்கள் கொள்ளை போய் இருக்கின்றன. பல இடங்களில் அழிக்கப்படுகின்றன. இதுதான் திராவிட மாடலா? நிலத்தில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் இப்போது ஆழ்கடலில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நமது கடல் பிராந்தியம் நமக்கு கிடைத்த வரப்பிரசாதம். ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எடுத்தாலும் இயற்கை சீற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே இதை அனுமதிக்க முடியாது. அனைத்து கட்சிகளும் இதை எதிர்த்து போராட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.