தமிழ்நாடு செய்திகள்

கூகுள் மேப் பார்த்து ஓட்டிய கார்- குறுகிய நடைபாலத்தில் சிக்கியது

Published On 2025-08-02 11:17 IST   |   Update On 2025-08-02 11:17:00 IST
  • பாலம் வழியாக பெரும்பாலும் நடந்தும், மோட்டார் சைக்கிளிலும் பொதுமக்கள் சென்று வருவது வழக்கம்.
  • குறுக்கே உள்ள நடைபாலத்தை கடந்து செல்ல வேண்டும் என கூகுள் மேப் காட்டியது.

குளித்தலை:

குளித்தலை பஸ் நிலையம் அருகே தென்கரை வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலின் மேல் பக்கவாட்டு சுவர் இல்லாத பாலம் ஒன்று உள்ளது.

குளித்தலை நகரப்பகுதியில் இருந்து இந்த பாலம் வழியாக கரூர்-திருச்சி புறவழி தேசிய நெடுஞ்சாலைக்கு செல்பவர்கள் இந்த பாலத்தை பயன்படுத்தி சென்று வருகின்றனர்.

இந்த பாலம் வழியாக பெரும்பாலும் நடந்தும், மோட்டார் சைக்கிளிலும் பொதுமக்கள் சென்று வருவது வழக்கம். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர் முகமது (வயது 50). இவர் காரில் கோவை சென்றுவிட்டு மீண்டும் கும்பகோணத்துக்கு நேற்று காரில் திரும்பினார்.

கரூரில் இருந்து திருச்சி செல்லும் வழியில் குளித்தலை அருகே தொழுகை நடத்துவதற்காக கூகுள் மேப் மூலம் பள்ளிவாசலை முகமது தேடியுள்ளார்.

குறுக்கே உள்ள நடைபாலத்தை கடந்து செல்ல வேண்டும் என கூகுள் மேப் காட்டியது. இதையடுத்து, குறுகிய பாலத்தின் வழியே முகமது காரை இயக்கினார்.

இதில் காரின் முன்சக்கரம் பாலத்தின் விளிம்பில் கீழே இறங்கி, அந்தரத்தில் தொங்கியது. வாய்க்காலில் அதிகளவில் தண்ணீர் செல்லும் நிலையில், அங்கிருந்தவர்கள் முகமதுவை காரில் இருந்து பத்திரமாக மீட்டனர்.

வாய்க்கால் தண்ணீரில் கார் கவிழ்ந்து விழாமல் பாலத்தில் தொங்கியபடி நின்றதால் காரில் வந்தவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து கிரேன் மூலம் பாலத்தில் விபத்துக்குள்ளான கார் பத்திரமாக மீட்கப்பட்டது.

Tags:    

Similar News