தமிழ்நாடு செய்திகள்

பா.ஜ.க. பூத் கமிட்டி முதல் மண்டல மாநாடு: அமித்ஷா இன்று நெல்லை வருகை

Published On 2025-08-22 06:35 IST   |   Update On 2025-08-22 06:35:00 IST
  • பா.ஜ.க. தலைவர்கள், முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.
  • பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானம் முதல் விழாமேடை வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நெல்லை:

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க இருக்கிறது. மீண்டும் ஆட்சி அமைக்க தி.மு.க. அரசு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது.

அதே நேரத்தில் மக்களுக்கு விரோதமாக தி.மு.க. அரசு செயல்படுகிறது என்று கூறி அவர்களை வீழ்த்தி ஆட்சி பீடத்தில் அமர அ.தி.மு.க. முழுவீச்சில் களமிறங்கியுள்ளது.

அதேபோல் அ.தி.மு.க. வுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க.வும் கடந்த முறையை விட, இந்த முறை அதிக இடங்களில் போட்டியிட திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் பா.ஜ.க. அதிக இடங்களில் போட்டியிடவும், அ.தி.மு.க. கூட்டணியை அதிக இடங்களில் வெற்றி அடைய செய்ய வேண்டும் என்பதற்காகவும் உள்துறை மந்திரி அமித்ஷா புதிய வியூகம் அமைத்து செயல்பட்டு வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டத்தில் பா.ஜ.க. சார்பில் இன்று நடைபெறும் முதல் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக அமித்ஷா வருகிறார்.

அவர், கேரள மாநிலம் கொச்சியில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மதியம் 2.50 மணியளவில் தூத்துக்குடி விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்திற்கு வந்து இறங்குகிறார்.

அங்கிருந்து பெருமாள்புரம் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டுக்கு காரில் புறப்பட்டு செல்கிறார்.

அங்கு தேநீர் விருந்தில் பங்கேற்றுவிட்டு மீண்டும் கார் மூலம் சாலை மார்க்கமாக வண்ணார்பேட்டை, வடக்கு புறவழிசாலை வழியாக விழா மேடைக்கு 3.20 மணிக்கு வருகிறார். இந்த மாநாட்டில் அமித்ஷா சுமார் ஒருமணி நேரம் பேசுகிறார்.

அங்கு பா.ஜ.க. தலைவர்கள், முக்கிய நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். பா.ஜ.க. ஆட்சியில் தமிழக மக்களுக்கு எவ்வளவு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதனால் மக்கள் அடைந்துள்ள பயன்கள் பற்றியும் விரிவாக பேச உள்ளார். மேலும், கூட்டணி கட்சியுடன் இணைந்து தேர்தலில் வெற்றி அடைவதற்கு மேற்கொள்ளப்பட உள்ள பணிகள், அதிக இடங்களில், அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது எப்படி?, சட்டசபை தேர்தல் வியூகம் ஆகியவை குறித்து நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த மாநாட்டில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் எச்.ராஜா உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

மாநாடு நடைபெறும் பகுதியில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று காலை ஆய்வு செய்தார். அங்கு அமைக்கப்பட்டு வரும் பிரமாண்ட பந்தல் உள்ளிட்ட பணிகளை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.

அமித்ஷா வருகையையொட்டி பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானம் முதல் விழாமேடை வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், மோப்பநாய் பிரிவு, சிறப்பு பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் படை போலீசார் என பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். ஆங்காங்கே பா.ஜ.க. கொடி, தோரணங்கள் கட்டப்பட்டு உள்ளன.

Tags:    

Similar News