ஏ....ங்க..... அரசு பள்ளிக்கு வாங்க..... கூமாபட்டி ஸ்டைலில் ரீல்ஸ் மூலம் மாணவர்கள் விழிப்புணர்வு
- பொதுவாக விஜயதசமி நாளில் தனியார் பள்ளிகளில் மட்டுமே தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் அதிகம் வருவார்கள்.
- ஆனால் சமீப காலமாக அரசு செயல்படுத்தும் திட்டங்களால் அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் அம்மைநாயக்கனூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 5-ம் ஆண்டாக மாணவர் சேர்க்கை 100 சதவீதம் அடைந்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் வருகிற அக்டோபர் 2-ம் தேதி விஜயதசமி நாளில் மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு என அனைத்து தரப்பு மக்களும் போற்றி புகழும் வேளையில் அரசு கொண்டு வந்துள்ள பல்வேறு திட்டங்களால் மாணவர்கள் எவ்வாறு பயனடைந்து வருகின்றனர் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக அம்மையநாயக்கனூர் அரசு தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள் கூமாபட்டி ரீல்ஸ் ஸ்டைலில் பெற்றோர்களுக்கு வித்தியாசமான அழைப்பு விடுத்துள்ளனர்.
அதில் ஏ.....ங்க..... இங்க பாருங்க..... அரசு பள்ளிங்க நம் தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்களால் நாங்கள் பயனடைந்து வருகிறோம். தினந்தோறும் தரமான காலை உணவு வழங்கப்படுகிறது பாருங்க....
எங்க பள்ளியில் எவ்வளவு பெரிய டி.வி. இருக்கு பாருங்க.....
எங்க பள்ளியில் கழிப்பறை வசதி எப்படி இருக்கு பாருங்க.....
எங்க பள்ளியில் வகுப்பறை எல்லாம் வேற லெவலில் இருக்கு பாருங்க....
என பள்ளியில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசின் திட்டங்களை மாணவ-மாணவிகள் தங்கள் மழலை கலந்த மொழியில் நகைச்சுவை உணர்வுடன் கைகளை காட்டி வெளிப்படுத்தும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பொதுவாக விஜயதசமி நாளில் தனியார் பள்ளிகளில் மட்டுமே தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் அதிகம் வருவார்கள். ஆனால் சமீப காலமாக அரசு செயல்படுத்தும் திட்டங்களால் அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கிராமபுரத்தில் உள்ள பெற்றோர்களை ஈர்க்கும் வகையில் தலைமை ஆசிரியர் மேற்கொண்டுள்ள இந்த விழிப்புணர்வு பிரசாரம் அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.