தமிழ்நாடு செய்திகள்

ஆஸ்திரேலியா துப்பாக்கி சூடு எதிரொலி- கொடைக்கானலில் பலத்த பாதுகாப்பு

Published On 2025-12-18 11:36 IST   |   Update On 2025-12-18 11:36:00 IST
  • இந்தியாவை பூர்வீகமாக கொண்ட நபரை பிடித்து அந்நாட்டினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • கடந்த சில நாட்களாகவே கொடைக்கானலில் இஸ்ரேல் நாட்டினர் வந்தவண்ணம் உள்ளனர்.

கொடைக்கானலில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை கொண்டாட பல்வேறு நாடுகளில் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம்.

அவர்கள் இங்கு 10 நாட்களுக்கு மேல் தங்கியிருந்து பல்வேறு சுற்றுலா தலங்களை பார்வையிட்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பிறகு சொந்த நாட்டுக்கு திரும்புவார்கள்.

குறிப்பாக இஸ்ரேல் நாட்டை சேர்ந்த யூதர்கள் கொடைக்கானல் அருகில் உள்ள வட்டகானல் பகுதியில் சுமார் 1 மாதம் வரை தங்கி ஓய்வு எடுத்து செல்வது வழக்கம். அதன்படி கடந்த சில நாட்களாகவே கொடைக்கானலில் இஸ்ரேல் நாட்டினர் வந்தவண்ணம் உள்ளனர். அவர்கள் பல்வேறு சுற்றுலா தலங்களை பார்வையிட்டும் மலை உச்சியில் அமர்ந்து தியானம் செய்தும் தங்கள் பொழுதை கழித்து வருகின்றனர்.

இவர்கள் தங்கியுள்ள பகுதிக்கு முன்பாக சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு வெளிநபர்கள் அல்லது சந்தேகப்படும்படியான நபர்கள் வருகிறார்களா? என சோதனையிட்டு வருகிறார்கள்.

24 மணி நேரமும் செயல்படும் இந்த சோதனைச்சாவடியில் போக்குவரத்து காவலர்கள் மற்றும் ஆயுதப்படை காவலர்கள் 20க்கும் மேற்பட்டோர் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் யூதர்களை குறிவைத்து நடந்த துப்பாக்கி சூட்டில் பலர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட இந்தியாவை பூர்வீகமாக கொண்ட நபரை பிடித்து அந்நாட்டினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கொடைக்கானல் வட்டகானல் பகுதியில் இஸ்ரேல் நாட்டினர் தங்கியுள்ள பகுதிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சி.சி.டி.வி. காமிராக்கள் அப்பகுதியில் பொருத்தப்பட்டு சந்தேகப்படும்படியான நபர்கள் வருகிறார்களா? என சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனை இன்னும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News