ராமதாஸை சந்தித்த ஆடிட்டர் குருமூர்த்தி - பாஜக கூட்டணியில் பாமகவை இணைக்க பேச்சுவார்த்தை?
- நேற்று துக்ளக்கில் பாமக பிளவு பட்டால் பாஜக கூட்டணிக்கும் ஆபத்து என கட்டுரை வந்துது.
- அந்த கட்டுரையை படித்து விட்டு ஆடிட்டர் குருமூர்த்தியை ராமதாஸ் போனில் அழைத்ததாக கூறப்படுகிறது.
பா.ம.க.வில் தந்தை-மகனுக்கு இடையே மோதல் வலுத்து வரும் நிலையில், ராமதஸை தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று அன்புமணி சந்தித்து பேசினார்.
அன்புமணிக்கு தலைமை பண்பு இல்லை என்று குற்றம் சாட்டிய ராமதாசிடம், அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவரா? பொதுக்குழு எப்போது கூட்டப்படும் என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டு இருந்தனர். அதற்கு இன்று பதில் அளிப்பதாக ராமதாஸ் கூறியிருந்தார்.
இந்நிலையில், சமாதான நடவடிக்கையாக ராமதாஸை அன்புமணி இன்று சந்தித்தார். சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசாமல் அன்புமணி அங்கிருந்து கிளம்பினார்.
இதனையடுத்து அதிமுகவை சேர்ந்த சைதை துரைசாமி, ஆடிட்டர் குருமூர்த்தி ஆகியோர் தைலாபுரத்திற்கு சென்று பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்தனர்.
ராமதாஸ் அழைப்பின் பெயராலேயே சைதை துரைசாமி, ஆடிட்டர் குருமூர்த்தி ஆகியோர் தைலாபுரத்திற்கு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று துக்ளக்கில் பாமக பிளவு பட்டால் அக்கட்சிக்கு மட்டுமில்ல வருகின்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கும் ஆபத்து என கட்டுரை வந்துள்ளது. அந்த கட்டுரையை படித்து விட்டு ஆடிட்டர் குருமூர்த்தியை ராமதாஸ் போனில் அழைத்ததாக கூறப்படுகிறது.
தந்தை - மகன் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வர இருவரும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க ராமதாஸ் விரும்பியுள்ளார். ஆனால் அன்புமணியின் வற்புறுத்தலால் தான் பாமக பாஜக கூட்டணி ஏற்பட்டது என்று ராமதாஸ் அண்மையில் தெரிவித்திருந்தார். பாமக - பாஜக கூட்டணி ராமதாஸ் - அன்புமணி இடையே பிளவை ஏற்படுத்தியது.
2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி பாஜக - அதிமுக கூட்டணி உறுதியாகியுள்ளது. இந்நிலையில், தற்போது கூட்டணியை பொறுத்தவரை பாமகவுக்கு 3 வாய்ப்புகள் மட்டும் தான் உள்ளன. ஒன்று திமுக கூட்டணி இல்லையென்றால் அதிமுக கூட்டணி. இன்னொருபக்கம் விஜயின் த.வெ.க.வுடன் பாமக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியானது.
ஆனால், திமுக கூட்டணி வலுவாக உள்ளதாலும், அக்கூட்டணியில் விசிக இடம்பெற்றுள்ளதாலும், த.வெ.க. முதல்முறையாக தேர்தலை சந்திப்பதாலும், அதிமுக - பாஜக கூட்டணியில் தான் பாமக இணையும் என்று கூறப்படுகிறது.
அன்புமணி ஆசைப்படும் பாஜகவும் ராமதாஸின் விருப்பமான அதிமுகவும் இப்போது ஒரே கூட்டணியில் இருப்பதால், அன்புமணி - ராமதாஸை சமாதானப்படுத்தி பாமகவை ஒன்றிணைக்கவும் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைக்கவும் தான் சைதை துரைசாமி, ஆடிட்டர் குருமூர்த்தி ஆகியோர் ராமதாஸை சந்தித்ததாக சொல்லப்படுகிறது.
இதனிடையே வரும் 8 ஆம் தேதி அமித் ஷா தமிழ்நாடு வரும் நிலையில் ராமதாஸ் - ஆட்டிட்டார் குருமூர்த்தி சந்திப்பு தமிழக அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.