தமிழ்நாடு செய்திகள்

ரோந்து பணியின் போது 'புஷ்பா-2' படம் பார்த்த போலீஸ் உதவி கமிஷனர் - அடுத்து நடந்த டுவிஸ்ட்

Published On 2024-12-08 12:49 IST   |   Update On 2024-12-08 12:49:00 IST
  • உரையாடல்கள் அனைத்தும் ஓபன் மைக்கில் நடந்ததால் மாநகரம் முழுவதும் போலீசாரிடையே இந்த சம்பவம் பேசு பொருளாக அமைந்துள்ளது.
  • கடந்த வாரம் இரவு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதலுக்கு கும்பல் ஒன்று முயன்றது.

நெல்லை:

நெல்லை மாநகர பகுதியில் குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் பொருட்டு போலீஸ் கமிஷனர் உத்தரவின்பேரில் இரவு நேரங்களில் போலீஸ் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி நேற்று மாநகர போலீஸ் கமிஷனர் (பொறுப்பு) மூர்த்தி மேற்பார்வையில் நெல்லை மாநகர சரகத்தில் இரவு ரோந்து பணியில் பெண் இன்ஸ்பெக்டர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

டவுன், சந்திப்பு, பாளை, மேலப்பாளையம் ஆகிய 4 இடங்களிலும் பெண் இன்ஸ்பெக்டர்கள் பணி செய்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு தலைமையாக உதவி போலீஸ் கமிஷனர் ஒருவர் பணியில் இருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு 11.30 மணி அளவில் அவர் தனது ரோந்து வாகனத்தில் சந்திப்பு உடையார்பட்டி பகுதியில் உள்ள தியேட்டருக்கு சென்றுள்ளார். அங்கு புஷ்பா-2 திரைப்படம் பார்ப்பதற்காக சென்ற உதவி கமிஷனர், ஜீப்பில் காவலுக்கு டிரைவரை அமர்த்திவிட்டு சென்றுள்ளார்.

இந்த நிலையில் போலீஸ் கமிஷனர் மூர்த்தி, மைக்கில் வந்து உதவி கமிஷனரை கூப்பிட்டுள்ளார். ஆனால் சுமார் 15 நிமிடங்கள் வரையிலும் அவர் திருப்பி கமிஷனரை தொடர்பு கொள்ளவில்லை.

இதனால் கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசார், உதவி கமிஷனரின் செல்போனில் சென்று தகவல் தெரிவிக்கவே, பதறி யடித்துக்கொண்டு தியேட்டரில் இருந்து வெளியே வந்த உதவி கமிஷனர், மைக்கில் கமிஷனரை தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது கமிஷனர் எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு தச்சநல்லூர் பகுதியில் ஒரு பிரச்சனை என்று சொன்னார்கள். அதனால் அங்கு நிற்கிறேன் என்று பொய் சொல்லி உள்ளார். இதனால் உண்மை நிலவரத்தை ஏற்கனவே அறிந்திருந்த கமிஷனர் மூர்த்தி, ஓபன் மைக்கில் இரவு பணி பார்க்காமல் தியேட்டரில் உட்கார்ந்து படம் பார்த்து கொண்டிருக்கிறீர்கள். மாநகரில் இன்று இரவு பணியில் முழுவதுமாக பெண் இன்ஸ்பெக்டர்கள் இருக்கும் நிலையில், நீங்கள் எந்தவித பொறுப்பும் இன்றி இப்படி செயல்படுவது நியாயமா? என்று கூறி கண்டித்துள்ளார்.

இந்த உரையாடல்கள் அனைத்தும் ஓபன் மைக்கில் நடந்ததால் மாநகரம் முழுவதும் போலீசாரிடையே இந்த சம்பவம் பேசு பொருளாக அமைந்துள்ளது.

கடந்த வாரம் இரவு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதலுக்கு கும்பல் ஒன்று முயன்றது. இந்நிலையில் பெண் இன்ஸ்பெக்டர்கள் இரவு ரோந்து பணியில் இருந்த நேரத்தில், உதவி கமிஷனர் புஷ்பா-2 படம் பார்த்தது குறித்து துறை ரீதியாகவும் விசாரணை நடந்து வருவதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News