உலகம்

கைதான ரணில் விக்ரமசிங்கேவுக்கு உடல்நலக் குறைவு- மருத்துவமனையில் அனுமதி

Published On 2025-08-23 11:39 IST   |   Update On 2025-08-23 16:10:00 IST
  • ரணில் விக்ரமசிங்கே அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
  • உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக சிறைச் சாலை மருத்துவமனையில் அவர் அனுமதி.

இலங்கையில் கடந்த 2022 ஜூலை முதல் 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை அதிபராக இருந்தவர் ரணில் விக்ரமசிங்கே (வயது 76). மேலும் 6 முறை பிரதமர் பதவி வகித்துள்ளார்.

அவர் அதிபராக இருந்தபோது தனது மனைவி மைத்ரிக்கு இங்கிலாந்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க அரசு பணத்தில் பயணம் மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் நேற்று ரணில் விக்ரமசிங்கே அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரை கைவிலங்கிட்டு போலீசார் அழைத்துச் சென்றனர்.

கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட ரணில் விக்ரமசிங்கேவை வருகிற 26-ந்தேதி வரை போலீஸ் காவலில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து அவர் வெலிக்கடை சிறைச் சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை ரணில் விக்ரமசிங்கேவுக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக சிறைச் சாலை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதை சிறைத்துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Tags:    

Similar News