முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் அன்வர் ராஜா
- அதிமுகவில் இருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்டுள்ளார்.
- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
அ.தி.மு.க. மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் அன்வர்ராஜா. அ.தி.மு.க.வில் சிறுபான்மை இன தலைவர்களில் இவர் முக்கிய பங்கு வகித்து இருந்தார்.
கடந்த 2001-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் போது இவர் தொழிலாளர் நலத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அவருக்கு சிறுபான்மை பிரிவு மாநில செயலாளர் பதவியையும் ஜெயலலிதா வழங்கி இருந்தார்.
கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது இவர் ராமநாதபுரம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். ஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு அவர் சசிகலாவின் ஆதரவாளராக மாறினார்.
இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானதும் சசிகலாவிடம் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி பக்கம் வந்தார். அவருக்கு சிறுபான்மை பிரிவில் எடப்பாடி பழனிசாமி முக்கியத்துவம் கொடுத்திருந்தார்.
இதற்கிடையே கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின்போது அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட வில்லை.
இந்த நிலையில் அவருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து அவர் சில கருத்துக்களை வெளியிட்டதால் அவர் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டார்.
2023-ம் ஆண்டு அவர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்தார். இதையடுத்து அவரை எடப்பாடி பழனிசாமி மீண்டும் அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.
2026-ம் ஆண்டு சட்ட சபை தேர்தலை சந்திக்க அ.தி.மு.க. தயாராகி வரும் நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பாஜகவுடன் மீண்டும் கூட் டணி அமைக்கப்பட்டது. அமித்ஷாவும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்து இந்த கூட்டணியை முன்னெடுத்து செல்கிறார்கள்.
பாஜகவுடன் அ.தி.மு.க. மீண்டும் கூட்டணி அமைத்தது அன்வர் ராஜாவுக்கு அதிருப்தியை கொடுத்தது. இது தொடர்பாக அவர் தனது கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை அன்வர் ராஜா தி.மு.க.வில் இணையப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. இதற்காக அவர் தி.மு.க. தலைமை அலுவலகமான அறிவாலயத்துக்கு காரில் சென்று கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த தகவல் வெளியான அடுத்த சில நிமிடங்களில் அவரை அ.தி.மு.க.வில் இருந்து நீக்கி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப் பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்தார். அன்வர்ராஜா அ.தி.மு.க. வில் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவித்து உள்ளார்.
இதற்கிடையே அன்வர் ராஜா அறிவாலயத்துக்கு சென்றார். அங்கு அவர் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தன்னை தி.மு.க.வில் இணைத்துக் கொண்டார்.