தமிழ்நாடு செய்திகள்

கரூர் துயரம்-தமிழக அரசும், காவல்துறையும் கவனக்குறைவாக செயல்பட்டுள்ளது: அண்ணாமலை

Published On 2025-09-28 00:20 IST   |   Update On 2025-09-28 00:20:00 IST
  • கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  • விஜய் கூட்டத்தில் மின்சாரம் தடை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன என்றார்.

சென்னை:

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை:

கரூரில் தவெக தலைவர் விஜய் கலந்து கொண்ட கூட்டத்தில் கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட நாற்பது பேர் உயிரிழந்திருப்பதாக வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.

பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் உரியச் சிகிச்சை அளிக்க வேண்டுமென்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு எத்தனை பேர் வருவார்கள் என்பதை முறையாகக் கணக்கிட்டு, அதற்கேற்ப இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதும், கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் பாதுகாப்புக்குத் தேவையான அளவு போலீசாரை பணியமர்த்துவதும் காவல்துறையின் பொறுப்பு.

விஜய் கூட்டத்தில் மின்சாரம் தடை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. இத்தனை கவனக்குறைவாகத் தமிழக அரசும், போலீசாரும் செயல்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

திமுகவினர் நடத்தும் கூட்டங்களுக்கு, அந்த மாவட்டத்தின் மொத்த போலீசாரை அனுப்பிப் பாதுகாப்பு கொடுக்கும் திமுக அரசு, எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமலிருப்பது வழக்கமாகியிருக்கிறது.

உடனடியாக, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் இந்த விபத்து நடந்ததா என்பது குறித்தும், மின்சாரம் தடைப்பட்டது குறித்தும் முழு விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

Tags:    

Similar News