தமிழ்நாடு செய்திகள்

பதிவுத்துறை பணி நியமனத்தில் தி.மு.க. அரசு பொய் சொல்கிறது- அன்புமணி கடும் கண்டனம்

Published On 2025-11-06 11:50 IST   |   Update On 2025-11-06 11:50:00 IST
  • 7 பேரும் இன்று வரை மாவட்டப் பதிவாளர்களாக பணி செய்வது எப்படி என்பதை பதிவுத்துறை விளக்குமா?
  • பதிவுத்துறை உதவி ஐஜி பணிக்கான பதவி உயர்வுப் பட்டியல் திரும்பப்பெறப்பட வேண்டும்.

சென்னை:

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

வருவாய்த்துறையில் தகுதிகாண் பருவத்தை நிறைவு செய்யாத உதவியாளர்களுக்கு பணிவிதி விலக்கு அளித்து துணை வட்டாட்சியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதே நடைமுறையை பதிவுத்துறை உதவித் தலைவர் பணிக்கான பதவி உயர்வு வழங்குவதில் பதிவுத்துறை பின்பற்றாதது ஏன்? யாருடைய பதவி உயர்வை தடுப்பதற்காக தி.மு.க. அரசு இவ்வாறு செய்தது?

பதவி உயர்வுக்கான தகுதி காண் நாளில், எந்தவித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத பல சார்பதிவாளர்களின் பெயர்கள் பதவி உயர்வுக்கான பட்டியலில் விடுபட்டிருக்கிறது. தகுதியின்றி பதவி உயர்வு பெற்ற 7 பேர் மாவட்ட பதிவாளர் பணியியிலிருந்து பதவி இறக்கம் செய்யப்படுவார்கள் என்று தமிழ்நாடு அரசு அறிவித்த பிறகும், அந்த 7 பேரும் இன்று வரை மாவட்டப் பதிவாளர்களாக பணி செய்வது எப்படி என்பதை பதிவுத்துறை விளக்குமா?

பதிவுத்துறை உதவித் தலைவர் பணி நியமனத்தில் அப்பட்டமாக விதிமீறலை நிகழ்த்தியுள்ள தி.மு.க. அரசு, அதை மறைப்பதற்காக பொய்களை கட்டவிழ்த்து விடக் கூடாது. எனவே நான் ஏற்கனவே வலியுறுத்தியதைப் போல, பதிவுத்துறை உதவி ஐஜி பணிக்கான பதவி உயர்வுப் பட்டியல் திரும்பப்பெறப்பட வேண்டும்; ஒருங்கிணைந்த பணி மூப்புப் பட்டியலை பதிவுத்துறை உடனடியாக வெளியிட வேண்டும்; அது குறித்து சம்பந்தப்பட்டவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில் பதிவுத்துறை உதவித் தலைவர், மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News