தமிழ்நாடு செய்திகள்

எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு 'காமராஜர்' பெயர் - ஜி.கே.வாசன் கடிதத்தை பெற்றுக்கொண்ட அமித் ஷா

Published On 2026-01-08 12:31 IST   |   Update On 2026-01-08 12:31:00 IST
  • சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.734.91 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் கடந்த 2022-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
  • எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது.

ஆங்கிலேயர் ஆட்சியின்போது கடந்த 1905-ம் ஆண்டில் கட்டப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம், 121 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. எழும்பூர் ரெயில் நிலைய கட்டிடம் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் தொன்மை வாய்ந்ததாகும். 144 ஆண்டுகள் கடந்தும் இந்த கட்டிடம் பழமை மாறாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நிலையத்தில் நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் ரூ.734.91 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு பணிகள் கடந்த 2022-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. மறு சீரமைப்பு பணியில் ரெயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் காந்தி இர்வீன் சாலையிலும் பின்புற நுழைவு வாயில் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் அமைக்கப்பட உள்ளது. இரு பகுதியிலும் விரிவாக்கம் மற்றும் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 1 லட்சத்து 35 ஆயிரத்து 406 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய ரெயில் நிலைய கட்டிடம் அமைய உள்ளது. பிரதான நுழைவு வாயில், பின்புற நுழைவு வாயில் ஆகிய இரு பகுதியிலும் 3 மாடி கட்டிடங்கள் கட்டப்பட உள்ளன.

பயணிகள் வருகை, புறப்பாடுக்கான பொது தளம், அடுக்குமாடி வாகன காப்பகங்கள், பார்சல்களை கையாள பிரத்யேக பகுதி, அனைத்து நடைமேடைக்கும் (பிளாட்பார்ம்) எளிதாக செல்லும் வசதி, பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கும் நடைமேடையில் இருந்து மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு செல்லும் வசதி என அனைத்து வசதிகளும் அமைக்கப்பட உள்ளன.

தற்போதுள்ள கட்டிடமும் புனரமைப்பு செய்யப்பட உள்ளது. பயணிகள் காத்திருப்பு பகுதியில் இருந்து நடைமேடைகளுக்கு செல்ல லிப்ட், எஸ்கலேட்டர் ஆகிய வசதிகளும் அமைய இருக்கின்றன. எழும்பூர் ரெயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது. அந்த வகையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜி.கே.வாசன், எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதி இருந்தார். இதனையடுத்து, ஜி.கே.வாசன் எழுதிய கடிதத்தை பெற்றுக்கொண்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் கொடுத்துள்ளார்.

சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு டாக்டர் எம்.ஜி.ஆர். ரெயில் நிலையம் என அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பெயர் சூட்டப்பட்டது நினைவு கூரத்தக்கது.

Tags:    

Similar News