காவலாளி அஜித் குமார் உயிரிழப்பு: பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்
- வலது கை மூட்டுக்கு மேலேயும், வலது கை மணிக்கட்டுக்கு கீழேயும் சிராய்ப்பு காயங்கள் இருந்தன.
- தவறி விழுந்தபோது வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த அஜித்குமார் நகை திருட்டு வழக்கு விசாரணைக்காக போலீசார் அழைத்துச் சென்றிருந்த போது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். மேலும் அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணமே உள்ளது.
இந்த நிலையில், அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. அதில், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த அஜித்குமாரின் உடலில் 18 காயங்கள் கண்டறியப்பட்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வலது கை மூட்டுக்கு மேலேயும், வலது கை மணிக்கட்டுக்கு கீழேயும் சிராய்ப்பு காயங்கள் இருந்தன. இடதுபக்க காதில் ரத்தம் வடிந்த நிலையிலும், வலது பக்க காதில் உள்பக்கம் ரத்தம் உறைந்த நிலையிலும் இருந்தது. இடதுபக்க தோள்பட்டை முதல் முழங்கை மூட்டு வரை கன்றிய காயங்கள் இருந்தன.
இடதுபக்க இடுப்பு, வலதுபக்க பின் முதுகில் சிராய்ப்புகள் இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, தவறி விழுந்தபோது வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.