தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் இன்று அ.தி.மு.க. செயற்குழு கூட்டம்

Published On 2025-05-02 10:32 IST   |   Update On 2025-05-02 10:32:00 IST
  • உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
  • குழு 15-க்கும் மேற்பட்ட தீர்மானங்களைத் தயாரித்துள்ளது.

சென்னை:

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அ.தி.மு.க., பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளது. பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைப்பதை ஜெயக்குமார் உள்பட மூத்த நிர்வாகிகள் சிலர் விரும்பவில்லை.

அவர்கள் வெளிப்படையாகவே தங்கள் அதிருப்தியை வெளியிட்டார்கள். பின்னர் கட்சி கட்டுப்பாடு கருதி அமைதியாகிவிட்டார்கள்.

இந்த சூழ்நிலையில் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு தலைமை கழகத்தில் நடக்கிறது. கூட்டத்துக்கு அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமை தாங்குகிறார்.

கூட்டணி அமைந்த பிறகு நடத்தப்படும் முதல் செயற்குழு என்பதால் இந்த செயற்குழுக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கழக செயற்குழு உறுப்பினர்களான தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், பிற மாநிலக் கழக செயலாளர்கள், கழக பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

வெளியூர்களில் இருந்து கட்சி நிர்வாகிகள் இன்று காலையில் சென்னை வந்து விட்டார்கள்.

இக்கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்களைத் தயாரிக்க, முன்னாள் அமைச்சர்கள், செம்மலை, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், வைகைச் செல்வன், ஜெயக்குமார், ஆர்.பி.உதயகுமார், அக்ரி கிருஷ்ண மூர்த்தி, ஓ.எஸ்.மணியன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் கொண்ட குழுவை பழனிசாமி அமைத்துள்ளார். அக்குழு 15-க்கும் மேற்பட்ட தீர்மானங்களைத் தயாரித்துள்ளது.

கூட்டத்தில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கப்பட்டது ஏன்? தி.மு.க.வை வீழ்த்த தேவையான வியூகங்கள் பற்றி எடப்பாடி பழனிசாமி விளக்குவார் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் கூட்டணி தொடர்பான அதிருப்தியை கட்சியினரிடம் போக்குவதற்கும் அவர் திட்டமிட்டுள்ளார்.

Tags:    

Similar News