தமிழ்நாடு செய்திகள்

நீண்ட கால கனவு நிறைவேறுகிறது..! நொளம்பூர்- மதுரவாயல் இடையே புதிய மேம்பாலம்: உதயநிதி திறந்து வைக்கிறார்

Published On 2025-09-03 16:37 IST   |   Update On 2025-09-03 16:37:00 IST
  • ரூ.31.65 கோடி மதிப்பீட்டில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட மேம்பாலப் பணி நிறைவடைந்துள்ளது.
  • 120 மீட்டர் நீளமுள்ள இந்த பாலம் இரு வழிப்பாதையாக கட்டப்பட்டுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் மழைக் காலத்தில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும் மாநகராட்சி சார்பில் புதிய பாலங்கள், தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன.

அந்த அடிப்படையில் நொளம்பூர்- மதுரவாயல் கூவம் ஆற்றின் குறுக்கே சன்னதி முதல் குறுக்கு தெருவில் பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் யூனியன் சாலையை இணைக்கும் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த பணி சென்னை மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்பட்டது. ரூ.31.65 கோடி மதிப்பீட்டில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட மேம்பாலப் பணி நிறைவடைந்துள்ளது. 120 மீட்டர் நீளமுள்ள இந்த பாலம் இரு வழிப்பாதையாக கட்டப்பட்டுள்ளது.

அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதனை அடுத்த வாரம் திறந்து வைக்கிறார்.

இந்த பாலம் நொளம்பூர், மதுரவாயல், நெற்குன்றம், அம்பத்தூர், பாடி, முகப் பேர், அயப்பாக்கம், திரு வேற்காடு, அடையாளம் பட்டு, அத்திப்பட்டு பகுதிகளுக்கு செல்லக்கூடிய மிக முக்கிய போக்குவரத்து நிறைந்த பாலம் ஆகும்.

அங்கு சிறு பாலங்கள் கட்டப்பட்டு இருந்ததால் மழைக்காலத்தில் பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து விடும். அதனால் மக்கள் சிறுபாலத்தை கடக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் மழை காலத்தில் அப்பகுதி மக்கள் சிறுபாலத்தை கடக்க முடியாமல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு விடும்.

நீண்ட காலமாக மக்கள் புதிய பாலம் கட்டக்கோரி போராடி வந்த நிலையில் அப்பகுதி மக்களின் பிரச்சினைக்கு விடியல் கிடைத்து உள்ளது.

இதுகுறித்து வளரசவாக்கம் மண்டல குழு தலைவர் வி.ராஜன் கூறியதாவது:-

புதிய பாலம் என்பது 143, 144 வார்டு மக்களின் நீண்ட கால கோரிக்கையாகும். இதன் மூலம் இப்பகுதி மக்களுக்கு மறுவாழ்வு கிடைத்து உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், கம்பெனி ஊழியர்கள் மற்றும் பொது மக்கள் பயன் அடைவார்கள்.

ஒவ்வொரு மழைக்காலத்திலும் கூவம் ஆற்றின் குறுக்கே ஏற்படும் வெள்ளப் பாதிப்பில் இருந்து புதிய பாலம் மக்களை பாதுகாக்கும். போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் சீராகும்.

இந்த திட்டத்தை செயல்படுத்திய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், டி.ஆர்.பாலு எம்.பி., காரம்பாக்கம் கணபதி எம்.எல்.ஏ. ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இந்த பாலம் அர்ப்ப ணிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News