தமிழ்நாடு செய்திகள்

வரதட்சணை கொடுமையால் புதுப்பெண் தற்கொலை: கணவர்-மாமனார், மாமியார் கைது

Published On 2025-08-07 11:59 IST   |   Update On 2025-08-07 11:59:00 IST
  • திருமணத்தின்போது பிரீத்திக்கு 120 பவுன் நகை, சொகுசு கார், ரூ.25 லட்சம் வரதட்சணையாக பெற்றோர் கொடுத்ததாக கூறப்படுகிறது.
  • கடந்த மாதம் 11-ந்தேதி ஈரோட்டில் இருந்து புறப்பட்டு திருப்பூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.

திருப்பூர்:

திருப்பூர் கே.செட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி. தொழில் அதிபர். இவரது மனைவி சுகந்தி. இந்த தம்பதியின் மகள் பிரீத்தி (வயது 26). இவருக்கும், ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரத்தை சேர்ந்த என்ஜினீயரான சதீஸ்வர் (30) என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்தின்போது பிரீத்திக்கு 120 பவுன் நகை, சொகுசு கார், ரூ.25 லட்சம் வரதட்சணையாக பெற்றோர் கொடுத்ததாக கூறப்படுகிறது.

கணவர் மற்றும் மாமியாருடன் ஏற்பட்ட தகராறில் பிரீத்தி கோபித்துக்கொண்டு, கடந்த மாதம் 11-ந்தேதி ஈரோட்டில் இருந்து புறப்பட்டு திருப்பூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.

பிரீத்தியின் பெற்றோர், சின்னக்கரையில் உள்ள சொத்தை சமீபத்தில் விற்பனை செய்துள்ளனர். இதில் பிரீத்தியின் பங்காக ரூ.50 லட்சம் வந்துள்ளது. அந்த பணத்தை சதீஸ்வர், தனக்கு கொடுக்குமாறு மனைவியிடம் தொடர்ந்து கேட்டதாக தெரிகிறது. இதனால் பிரீத்தி மனம் உடைந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெற்றோர் வீட்டில் சோகமாக இருந்து வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரீத்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் பற்றி அறிந்ததும் நல்லூர் போலீசார் விரைந்து சென்று, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வரதட்சணை கொடுமையால் பிரீத்தி தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர், உறவினர்கள் குற்றம்சாட்டினர். மேலும் பிரீத்தியின் கணவர் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்பிறகே உடலை பெறுவோம் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வரதட்சணை புகார் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருப்பூர் ஆர்.டி.ஓ. மோகனசுந்தரம், பிரீத்தியின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்.

இந்தநிலையில் நல்லூர் போலீசார் பிரீத்தியின் கணவர் சதீஸ்வர், மாமனார் விஜயகுமார், மாமியார் உமா ஆகியோரிடம் விசாரணை நடத்திய நிலையில், இன்று காலை 3பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ., மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவினாசியில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் ரிதன்யா தற்கொலை செய்த நிலையில், திருப்பூரில் மீண்டும் மற்றொரு இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

Similar News