டிசம்பர் மாதத்தில் 3 மெகா திட்டங்கள்- தமிழக அரசு தீவிரம்
- இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தவுடன் தமிழகம் முழுவதும் இருக்கும் கல்லூரி மாணவர்கள் அரசின் லேப்டாப்பை பெறுவார்கள்.
- உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
சென்னை:
தமிழகத்தில் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதம் தொடக்கத்தில் வெளிவர வாய்ப்பு இருக்கிறது. தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டால், தமிழக அரசால் புதிய திட்டப்பணிகளை அறிவித்து செயல்படுத்த முடியாது. எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிதாக செயல்படுத்த வேண்டிய திட்டங்களை விரைவில் தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகளை தொடங்கி உள்ளார். தற்போதைய நிலையில் அடுத்த மாதம் (டிசம்பர்) மாதம் 3 மெகா திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
அதில் முதலாவது கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம். கடந்த பட்ஜெட்டில், 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினினின் நேரடி கண்காணிப்பில் இந்த திட்டப்பணிகள் நடப்பதால் அதிகாரிகள் பம்பரமாக சுழன்று செய்து வருகின்றனர். தற்போது இந்த திட்டம் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டது. முதல்கட்டமாக 10 லட்சம் லேப்டாப்கள் ஏப்ரல் மாதத்திற்குள் வழங்கப்பட்டு விடும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார். இந்த லேப்டாப்களை தயாரிக்கும் பணி ஏசர், டெல், எச்.பி. ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. இவர்கள் இந்த லேப்டாப்களை தயார் செய்து வைத்திருக்கின்றனர். ஒரு லேப்டாப் ரூ.21 ஆயிரத்து 650 என்ற விலையில் வாங்கப்படுகிறது. இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தவுடன் தமிழகம் முழுவதும் இருக்கும் கல்லூரி மாணவர்கள் அரசின் லேப்டாப்பை பெறுவார்கள்.
இரண்டாவது மகளிர் உரிமை தொகை திட்ட விரிவாக்கம். தமிழகத்தில் தற்போது ஒரு கோடியே 14 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி இவர்களது வங்கி கணக்கிற்கு மாதம்தோறும் 15-ந் தேதி தலா ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்கு பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. எனவே இந்த திட்டத்தின்கீழ் விடுப்பட்ட மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. அதற்காக உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மொத்தம் 28 லட்சம் பெண்கள், இந்த திட்டத்தின் கீழ் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பம் செய்து உள்ளனர்.
இந்த மனுக்கள் பரிசீலனை தற்போது இறுதிகட்டத்தை எட்டி பட்டியல் தயாராகி வருகிறது. ஏற்கனவே அரசின் அறிவிப்புப்படி, இந்த திட்டத்தின்கீழ் உள்ள தகுதி வரையறை அடிப்படையில் தகுதியான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி இவர்களுக்கு டிசம்பர் மாதம் 15-ந் தேதி முதல் வங்கிக்கணக்கில் பணம் போடப்படும். ஆனால் எத்தனை பெண்களுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது என்று அறிவிக்கப்படவில்லை.
மூன்றாவது பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம். இந்த திட்டம், ஜனவரி மாதம் செயல்படுத்தப்படும் என்றாலும், இந்த திட்டப்பணிக்கான முடிவுகள் டிசம்பரிலேயே எடுக்கப்பட்டுவிடும். 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது பொங்கல் தொகுப்புடன், ரொக்க தொகையும் வழங்கப்படும் என்ற பேச்சு பரவலாக எழுந்து உள்ளது. அதற்கு காரணம், ஏப்ரல் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடப்பதுதான். ஆனால் அரசு தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இருந்தாலும், தேர்தல் காரணமாக நிச்சயம் அரசு சார்பில் ரொக்கத்தொகை கொடுப்பார்கள் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு அனைவருக்கும் உள்ளது. தமிழக அரசுக்கு நிதி சுமை இருந்தாலும், இந்த பொங்கலுக்கு ரொக்கத்தொகை நிச்சயம் வழங்கப்படும் என்று சிலர் உறுதியாக கூறுகின்றனர்.
தமிழகத்தில் மொத்தம் 2.27 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. ஒரு குடும்பத்திற்கு ரூ.3 ஆயிரம் வழங்கினால் அரசுக்கு மொத்த செலவு ரூ.6 ஆயிரத்து 800 கோடி ஆகும் என்றும், ரூ.6 ஆயிரம் வழங்கினால் ரூ.13 ஆயிரத்து 620 கோடி தான் ஆகும். எனவே இது தமிழக அரசுக்கு மிகப்பெரிய சுமை கிடையாது என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் இறுதி முடிவு எடுப்பார் என்று அதிகாரிகள் சொல்கின்றனர்.
எனவே டிசம்பர் மாதத்தில் லேப்டாப் வழங்கும் திட்டம், மகளிர் உரிமைத்தொகை விரிவாக்க திட்டம் மற்றும் பொங்கல் தொகுப்பு ரொக்கத்தொகை திட்டம் ஆகிய 3 மெகா திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.