தஞ்சை அருகே குளத்தில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
- 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
- சம்பவம் குறித்து வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
வல்லம்:
தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே திருவேங்கப்புடையான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் மாதவன் (வயது10).
அதே பகுதியை சேர்ந்த செந்தில் மகன் பாலமுருகன் (10) மற்றும் ஸ்ரீதர் மகன் ஜஸ்வந்த் (8) இவர்கள் 3 பேரும் திருவேங்கப்புடையான்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் 5 மற்றும் 3-ம் வகுப்பு படித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று திருவேங்கப்புடையான்பட்டியில் இருந்து பொதுமக்கள் குடும்பத்துடன் அருகே மருதகுடி கிராமத்தில் நடந்து வரும் கோவில் திருவிழாவிற்கு சென்றனர். அனைவரும் திருவிழாவை பார்த்து கொண்டு இருந்தனர்.
அப்போது மாதவன், பாலமுருகன், ஜஸ்வந்த் ஆகிய 3 மாணவர்கள் மட்டும் அதேகிராமத்தில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்றனர். ஒன்றாக சேர்ந்து குளித்தபோது குளித்தின் ஆழமான பகுதிக்கு சென்றனர். அப்போது திடீரென தண்ணீரில் மூழ்கினர். 3 பேருக்கும் நீச்சல் தெரியதால் தண்ணீரில் தத்தளித்து காப்பாற்றுங்கள் என அபய குரல் எழுப்பினர்.
சிறிது நேரத்தில் மாணவர்கள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கினர். இதற்கிடையே 3 பேரையும் திருவிழாவில் காணாதது கண்டு அவர்களது பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பல இடங்களில் தேடி பார்த்தனர். பின்னர் உறவினர்களுடன் சேர்ந்து அதே பகுதியில் உள்ள குளத்திற்கு சென்ற பார்த்தபோது வெளியில் மாணவர்களின் உடமைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து கிராம மக்கள் குளத்தில் குதித்து தேடிபார்த்தனர். அப்போது மூழ்கிய நிலையில் இருந்த மாதவன், பாலமுருகன், ஜஸ்வந்த் ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே 3 பேரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவர்களது உடல்களை பார்த்து பெற்றோர்கள் கதறி அழுதனர். இச்சம்பவம் குறித்து வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
குளத்தில் மூழ்கி 3 மாணவர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.