தமிழ்நாடு செய்திகள்

ஆபாச சைகை காட்டிய நபரை இளைஞர்கள் தாக்கிய காட்சி.

ஓடும் பஸ்சில் ஆபாச சைகை காட்டிய நபரை செருப்பால் அடித்த பெண்

Published On 2023-06-20 13:02 IST   |   Update On 2023-06-20 13:02:00 IST
  • கோபத்தின் உச்சிக்கு சென்ற பெண், அந்த நபருக்கு எச்சரிக்கை விடுத்தார்.
  • போலீசார் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

மேட்டுப்பாளையம்:

கோவையை சேர்ந்த இளம்பெண் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அவர் நேற்று அலுவலகம் சென்றார். அதன்பிறகு மேட்டுப்பாளையத்தில் இருந்து பஸ்சில் கோவைக்கு புறப்பட்டார்.

இளம்பெண் இருக்கைக்கு அருகே உள்ள இருக்கையில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் இளம்பெண்ணிடம் ஆபாச சைகை காட்டினார். இது அந்த பெண்ணுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. கோபத்தை அடக்கிக் கொண்டு முகத்தை வேறு பக்கம் திருப்பிக்கொண்டார். இது அந்த நபருக்கு வசதியாக அமைந்துவிட்டது. எனவே அவர் துணிச்சலாக மீண்டும், மீண்டும் அந்த பெண்ணுக்கு ஆபாச செய்கை காட்டினார்.

இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற பெண், அந்த நபருக்கு எச்சரிக்கை விடுத்தார். அப்போது பெண்ணுக்கு பஸ்சில் இருந்த மற்ற பயணிகளும் ஆதரவுக்குரல் எழுப்பினர். உடனே அந்த நபர் பஸ்சில் இருந்து நைசாக இறங்கி தப்ப முயன்றார். ஆனால் அந்த பெண் விடவில்லை. பஸ்சில் இருந்து குதித்த அவரை சுற்றி வளைத்து பிடித்து தடுத்து நிறுத்தினார்.

எனக்கு உன் பேத்தி வயதுதான் இருக்கும். என்னிடம் இப்படி ஆபாசமாக நடந்து கொள்கிறாயே, உனக்கு மனசாட்சி உள்ளதா. உன் மனைவி, பிள்ளைகளின் நம்பரை கொடு, நான் அவர்களிடம் நியாயம் கேட்கிறேன் என்று கேட்டு உள்ளார். ஆனால் போன் நம்பரை கொடுக்க அவர் மறுத்தார்.

இதனால் இளம்பெண் ஆத்திரம் அடைந்து செருப்பை கழற்றி அந்த நபரை சரமாரியாக அடித்தார். அப்போது சுற்றி நின்ற பொதுமக்களும் தர்மஅடி கொடுத்தனர்.

தகவலறிந்த மேட்டுப்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த முதியவரை மீட்டனர். அவருக்கு பொதுமக்கள் தாக்கியதில் சிறிய காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவரை போலீசார் மேட்டுப்பாளையம் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு அந்த நபரை போலீசார் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். இளம்பெண் புகார் அளிக்க மறுத்ததால் அந்த நபரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

இதற்கிடையே ஓடும் பஸ்சில் பாலியல் தொல்லை கொடுத்த நபரை இளம்பெண் செருப்பால் அடித்த நிகழ்வை, யாரோ சிலர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவு செய்து உள்ளனர். இது சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

Tags:    

Similar News