தமிழ்நாடு

பாராளுமன்ற தேர்தலில் கோவையில் மீண்டும் களம் இறங்கும் கமல்- எதிர்க்க போகும் பா.ஜ.க வேட்பாளர் யார்?

Published On 2023-07-02 08:27 GMT   |   Update On 2023-07-02 08:27 GMT
  • வருகிற தேர்தலில் தி.மு.க. ஆதரவுடன் களம் இறங்கினால் வெற்றி எளிதானது என்று கமல்ஹாசன் கருதுகிறார்.
  • தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் ஒன்றாக கோவையை கருதுவதால் பலமான வேட்பாளரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.

சென்னை:

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருப்பதால் அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. அதேநேரம் ஒவ்வொரு கட்சியின் பிரபலங்களும் தங்களுக்கு சாதகமான தொகுதிகளை குறிவைத்து வேலை செய்யத்தொடங்கி விட்டார்கள்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் கோவை தொகுதியில் போட்டியிட போவதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடப்போகும் பா.ஜனதா வேட்பாளர் யார்? என்று கட்சி வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனை எதிர்த்து பா.ஜனதா தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் போட்டியிட்டு 1,728 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மயூரா ஜெயக்குமார் 42,384 வாக்குகள் பெற்றிருந்தார்.

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் கம்யூனிஸ்டு வேட்பாளர் நடராஜன் போட்டியிட்டு 5 லட்சத்து 71 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மக்கள் நீதி மய்யம் சுமார் 1½ லட்சம் வாக்குகள் பெற்றிருந்தது.

வருகிற தேர்தலில் தி.மு.க. ஆதரவுடன் களம் இறங்கினால் வெற்றி எளிதானது என்று கமல் ஹாசன் கருதுகிறார்.

கோவை தொகுதி மக்களை கவரும் வகையில் சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட தனியார் பஸ் பெண் டிரைவரை அழைத்து அவருக்கு சொந்தமாக புதிய கார் வாங்கி கொடுத்தார்.

கோவை தொகுதியை குறிவைத்து கமல்ஹாசன் காய்களை நகர்த்தி வருவதால் அவர் போட்டியிடுவது உறுதி என்றே கூறப்படுகிறது. கமல்ஹாசன் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடப் போகும் பா.ஜனதா வேட்பாளர் யார் என்பதுதான் இப்போதைய கேள்வி.

கடந்த முறை பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில கவர்னர் ஆகிவிட்டார். கமல்ஹாசனை எதிர்த்து நிறுத்தும் வேட்பாளர் தொகுதியில் நன்கு அறிமுகமானவராக இருக்க வேண்டும் என்று கட்சி மேலிடம் நினைக்கிறது.

மேலும் தமிழகத்தில் பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் ஒன்றாக கோவையை கருதுவதால் பலமான வேட்பாளரை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளார்கள்.

வானதி சீனிவாசன் தற்போது எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இருந்தாலும் அவரையே மீண்டும் களம் இறக்க கட்சி விரும்புவதாக கூறப்படுகிறது.

Tags:    

Similar News