தமிழ்நாடு

பார்வை மாற்றுத் திறனாளிகளை போட்டி தேர்வின்றி பணி நியமனம் செய்ய வேண்டும்- ஓ.பன்னீர்செல்வம்

Published On 2024-02-16 10:26 GMT   |   Update On 2024-02-16 10:26 GMT
  • தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி அனைவருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும்
  • தி.மு.க. அரசின் இந்தச் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பார்வை மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கு போட்டித் தேர்விலிருந்து விலக்களிக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி அனைவருக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும் என்றும், ஊக்கத் தொகை 5,000 ரூபாயாக உயர்த்தப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி பல ஆண்டுகளுக்கு முன்பு போராடிய போது, அவற்றை நிறைவேற்றித் தருவதாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலின் அறிவித்தார் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

தங்களது கோரிக்கைகள் குறித்து முதல்-அமைச்சரிடம் முறையிட அனுமதி கேட்டால் அனுமதி மறுக்கப்படுகிறது என்றும் பார்வை மாற்றுத் திறனாளிகள் கூறுகின்றனர். தி.மு.க. அரசின் இந்தச் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அழைத்துப் பேசி, அவர்களுடைய கோரிக்கைகளுக்கு சுமூக தீர்வு காண வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிறப்புத் தேர்வு நடத்தி அவர்களுக்கு பணி நியம னங்கள் வழங்க வேண்டும் என்றும் தி.மு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News