வாழைத்தாரை விவசாயிகள் தூக்கி சென்றனர்
விநாயகர் சதுர்த்தியையொட்டி விலை உயர்ந்தது- சத்தியமங்கலத்தில் பூவன் தார் ரூ.900-க்கு விற்பனை
- விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று நடந்த ஏலத்திற்கு 939 வாழைத்தார் களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
- விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் வளர்பிறை முகூர்த்த தினங்கள் உள்ளதால் வாழைத்தார்கள் நல்ல விலைக்கு விற்பனையானது.
சத்தியமங்கலம்:
சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் வாரம்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வாழைத்தார் ஏலம் நடைபெறுவது வழக்கம். இதில் சத்தியமங்கலம், கெம்பநாயக்கன் பாளையம், டி.ஜி. புதூர், சிக்கரசம்பாளையம், புது வடவள்ளி, அரசூர், உக்ரம், செண்பகபுதூர், பெரியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் விளைவித்த வாழைத்தார்களை ஏலத்திற்கு கொண்டு வருவது வழக்கம்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று நடந்த ஏலத்திற்கு 939 வாழைத்தார் களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் பூவன் ரக ஆளு உயர வாழைத்தார் ரூ.900 வரையிலும், தேன் வாழை ரூ.600, செவ்வாழை ரூ.650, மொந்தன் ரூ. 250 வரையிலும் விற்பனையானது.
இதில் சத்தியமங்கலம் அருகே உள்ள காளியூரை சேர்ந்த விவசாயி அம்மாசை குட்டி என்பவர் தனது தோட்டத்தில் விளைந்திருந்த ராட்சத ஆள் உயர பூவன் ரக வாழைத்தாரை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தார்.
இந்த வாழைத்தாரை உடுமலையை சேர்ந்த ஒரு வியாபாரி போட்டி போட்டு ஏலம் எடுத்ததில் ரூ. 900-க்கு ராட்சத வாழைத்தார் விற்பனையானது. இந்த ராட்சத வாழைத்தாரை இரண்டு பேர் கை தாங்கலாக தூக்கி சென்றனர்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் வளர்பிறை முகூர்த்த தினங்கள் உள்ளதால் வாழைத்தார்கள் நல்ல விலைக்கு விற்பனையானது.