முதல் அரசியல் மாநாட்டில் விஜயகாந்த் ஆற்றிய சூளுரை
- நாம் யார்? எப்படிப்பட்டவர்கள் என்று தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் இந்திய நாட்டுக்கே தெரியப்படுத்த வேண்டும்
- 90 சதவீத மக்கள் நிச்சயமாக என்னை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
மதுரை:
கடந்த 14.9.2005 அன்று மதுரை திருநகரில் விஜயகாந்தின் முதல் அரசியல் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் தே.மு.தி.க. என்ற தனது கட்சியின் பெயரை விஜயகாந்த் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மாநாட்டிற்கு தலைமை தாங்கிய விஜயகாந்த் பேசியதாவது:-
நாம் யார்? எப்படிப்பட்டவர்கள் என்று தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் இந்திய நாட்டுக்கே தெரியப்படுத்த வேண்டும். இந்த கட்சிக்கு பெயர் வைப்பது குறித்து நானும், எனது மனைவியும் கலந்து பேசினோம். எனது நண்பர் குனியமுத்தூர் பாலசுப்பிரமணியனிடமும் பேசினேன். இரண்டு, மூன்று மாதங்களாக பல பெயர்களை எழுதி பார்த்தேன். குழப்பமாக இருந்தது. உண்மையிலேயே சொல்லப்போனால் நேற்று இரவுதான் கட்சி பெயரை முடிவு செய்தேன். அது என்னவோ தெரியவில்லை. கடவுளின் கருணையாலும், உங்களது ஆசியினாலும் இது நடந்து உள்ளது.
மதுரையை ஆளும் சிவபெருமான், மீனாட்சி, திருப்பரங்குன்றம் முருகன் மற்றும் எனது குலதெய்வம் அருளாலும், உங்களின் ஆசியினாலும் கட்சியின் பெயர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என வைக்கப்பட்டுள்ளது. திராவிடம் என்றால் தமிழ் மட்டும்தான் என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் 4 மொழிகள் சேர்ந்ததுதான் திராவிட நாடு.
திராவிட நாடு தேசியத்துக்குள் அங்கம் வகிக்க வேண்டும் என்பதால் தேசியத்தை சேர்த்து உள்ளோம். இந்திய நாடு ஒற்றுமையாக இருக்க தேசியம் அவசியம்.
முற்போக்கு என்பதற்கு காரணம், இன்னும் கல்வி, பொருளாதாரம் போன்ற விஷயங்களில் நாம் பின்தங்கியே இருக்கிறோம் என்ற நிலை மாற, முற்போக்குத்தனமான கொள்கைகள் இருக்க வேண்டும். சிந்தனைகள் வரவேண்டும் என்பதற்காகத்தான் முற்போக்கு என்ற வார்த்தையை கட்சியின் பெயரில் சேர்த்துள்ளோம்.
எந்த அளவுக்கு இந்த பெயர் பிரபலம் அடையும்?. நிச்சயமாக பிரபலம் அடையும். அது உங்களால் முடியும். நீங்கள் இருக்கிறீர்கள். நான் நம்பி இருப்பது மக்களைத்தான். எப்படி நம் மன்றக்கொடி 5 ஆண்டுகளில் பிரபலம் அடைந்ததோ, அதுபோல கட்சியின் பெயர் இன்னும் 6 மாதத்தில் பிரபலமாகும்.
90 சதவீத மக்கள் நிச்சயமாக என்னை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. 50 சதவீத ஓட்டுகள் பெண்களிடம் உள்ளது என்பதும் எனக்குத்தெரியும்.
(அப்போது அங்கிருந்த பெண்கள் கூட்டத்தினரை பார்த்து, உங்கள் ஆதரவு எனக்குத்தானே என கேட்டார். அதற்கு பெண்கள் அனைவரும் ஆமாம்... ஆமாம்... என்று சொல்லி கரகோஷம் எழுப்பினர்)
பெயருக்கு ஏற்றாற்போல கட்சியின் செயல்பாடுகள் அமையும். மற்றவர்களை போல இரண்டு நாள், மூன்று நாள் மாநாடு நடத்தலாம் என நினைத்தேன். ஆனால் எனது தொண்டர்கள் யாரும் பணக்காரர்கள் அல்ல. ஏழைகள்தான். அதனால்தான் ஒருநாள் மாநாடு நடத்துகிறேன். உங்கள் சக்தி அனைவருக்கும் தெரியவேண்டும். சிறு, சிறு தவறுகள் இருக்கலாம். அது எல்லோரிடமும் இருக்கும். ஆனால் எனது தொண்டர்கள் ராணுவத்தை போன்றவர்கள்.
இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
பேசி முடித்ததும் தனது ரசிகர் மன்றத்தின் கொடியை தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் கொடியாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.