தமிழ்நாடு

வாய்ப்பில்ல ராஜா, வாய்ப்பில்ல... சீமான் பாணியில் பதிலளித்த ஜெயக்குமார்

Published On 2022-08-10 16:51 GMT   |   Update On 2022-08-10 16:51 GMT
  • ஓபிஎஸ், டிடிவி, சசிகலா ஆகியோர் வேண்டுமானால் ஒன்றிணையலாம் என ஜெயக்குமார் கருத்து
  • அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் வகையில் பாஸ் கொடுக்கலாம் என யோசனை

சென்னை:

பிளவுகளை கடந்து அதிமுக ஒன்றிணையும் என்றும், மீண்டும் அதிமுக ஆட்சியமைக்கும் என்றும் சசிகலா கூறி உள்ளார். இதுபற்றி அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்களை கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ஜெயக்குமார், 'அதற்கு வாய்ப்பே இல்லை, வாய்ப்பில்லை ராஜா... வாய்ப்பில்ல' என்றார்.

'ஓபிஎஸ், டிடிவி, சசிகலா ஆகியோர் வேண்டுமானால் ஒன்றிணையலாம். ஆனால் இவர்களையெல்லாம் எங்கள் கட்சியில் சேர்ப்பது, நடக்கவே நடக்காது' என்றார் ஜெயக்குமார்.

பிங்க் பஸ்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்து ஜெயக்குமார் கூறியதாவது:-

உலகிலேயே துக்ளக் ஆட்சி என்றால் அது திமுக ஆட்சியைத்தான் சொல்ல வேண்டும். திராவிட மாடல் ஆட்சி என்று கூறிக்கொண்டு திராவிடத்தையே இழிவுபடுத்தும் வகையில்தான் அவர்களின் செயல்பாடுகள் உள்ளன.

பொதுவாக பிற மாநிலங்களில் மகளிருக்காக புதிய பேருந்துகளை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் இங்கே பழைய பேருந்துகளில் முன்பக்கம் மட்டும் பெயிண்டு அடித்து வைத்திருக்கிறார்கள். அதிலும் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய முடியுமா? என்றால் இல்லை. மொத்த பேருந்துகளில் 10 சதவீதம்கூட பிங்க் பேருந்துகள் இல்லை. இந்த இலவச பேருந்து பயண திட்டம் பெண்களை ஏமாற்றும் திட்டம். தமிழ்நாட்டின் மானம் கப்பலேறும் அளவுக்கு செய்கிறார்கள்.

பெண்கள் இலவசமாக பயணம் செய்வதற்கு பிங்க் நிற பேருந்துகளுக்குப் பதிலாக எந்த பேருந்துகளிலும் இலவசமாக பயணம் செய்யும் வகையில் பாஸ் கொடுக்கலாம். அதை செய்யுங்கள். ஆனால் மக்களை மோசடி செய்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, மோசடியான திட்டத்தை, ஏமாற்று திட்டங்களை விளம்பரத்தின் மூலம் முன்னிலைப்படுத்தி ஆதாயம் தேடலாம் என்று நினைக்கிறது. அது நடக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News