தமிழ்நாடு செய்திகள்

அதானி குழுமத்தின் தில்லுமுல்லு பற்றி ரிசர்வ் வங்கி விசாரணை நடத்த வேண்டும்- வைகோ

Published On 2023-02-01 10:28 IST   |   Update On 2023-02-01 10:28:00 IST
  • அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட ஏழு நிறுவனங்களின் பங்குகள் 819 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
  • அதானி குழுமத்தின் பங்கில் 8 சதவீதத்தை, அதாவது ரூ.74 ஆயிரம் கோடி பங்குகளை எல்ஐசி வைத்து உள்ளது.

சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் முதலீட்டு ஆய்வு நிறுவனம், பங்குச்சந்தையில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மேற்கொள்ளும் தில்லுமுல்லுவை அம்பலப்படுத்தி வருகிறது.

அந்த நிறுவனம் கடந்த வாரம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், "அதானி குழுமம் பங்குச் சந்தையில் பல்வேறு முறைகேடுகளைச் செய்து, ரூ.17.80 லட்சம் கோடிக்கு மோசடி செய்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ளது. 'அதானி குழுமத்தின் மொத்த சொத்து மதிப்பு தோராயமாக 120 பில்லியன் டாலர் (ரூ.9.84 லட்சம் கோடி). இதில், 100 பில்லியன் டாலர் (ரூ.8.2 லட்சம் கோடி) கடந்த மூன்று ஆண்டில் ஈட்டப்பட்டுள்ளது.

இந்தக் காலக்கட்டத்தில் அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட ஏழு நிறுவனங்களின் பங்குகள் 819 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், பங்குச்சந்தையில் மோசடி செய்து, போலி நிறுவனங்கள் மூலமாக அதானி நிறுவனம் பணத்தை முறைகேடாக ஈட்டியுள்ளது. இதற்காக தாராள வரிச்சலுகை உள்ள மொரீசியஸ், ஐக்கிய அரபு எமிரேட், கரீபியன் தீவுகள் போன்ற நாடுகளில் போலி நிறுவனங்களை தொடங்கி உள்ளது. இவற்றை அதானி குழுமத்தில் உயர் பதவிகளில் உள்ள அதானியின் உறவினர்கள் நிர்வகித்து வருகின்றனர். மொரீசியசில் மட்டுமே 38 போலி நிறுவனங்களை அதானி குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர்.

மேலும், அதானி குழுமம் வரம்புக்கு மீறி கடன் பெற்றுள்ளது. இதனால் நிலையற்ற தன்மையில் அதானி குழும நிறுவனங்கள் உள்ளன" என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கருப்புப் பண ஒழிப்பு பற்றி பேசும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, தனக்கு நெருக்கமான நிறுவனத்தின் இந்த சட்ட விரோதச் செயல்களைப் பார்த்து கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறதா? இந்த குற்றச்சாட்டுகளை பெயரளவில் விசாரிக்காமல் முழுமையாக செபி விசாரிக்குமா?

அதானி குழுமத்தின் பங்கில் 8 சதவீதத்தை, அதாவது ரூ.74 ஆயிரம் கோடி பங்குகளை எல்ஐசி வைத்து உள்ளது. மேலும், அதானி குழுமத்தின் கடனில் 40 சதவீதத்தை ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி வழங்கி உள்ளது. எனவே, அதானி குழுமம் முறைகேடு செய்து தனது பங்கு மதிப்பை தன்னிச்சையாக உயர்த்தி, அவற்றை அடமானமாக வைத்து, எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளில் கடன் பெற்றதா? என்பது குறித்து இந்திய ரிசர்வ் வங்கி விசாரணை நடத்த வேண்டும். இது உண்மையாக இருந்தால் எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளின் நிதிநிலை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

எனவே, பொதுநலன் கருதி இந்திய பங்குச்சந்தை ஒழுங்கமைப்பான செபி மற்றும் ரிசர்வ் வங்கி ஆகியவை உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News