கோவளம் கிழக்கு கடற்கரை சாலையில் கடல் மணலை லாரியில் கடத்திய 2 பேர் கைது
- திருப்போரூர் வட்டாட்சியர் ராஜன் உத்தரவின் பேரில் கேளம்பாக்கம் வருவாய் ஆய்வாளர், கோவளம் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் இரவு சோதனையில் ஈடுபட்டனர்.
- குன்றுக்காடு கிராமத்தில் கடல் மணலை அள்ளிக்கொண்டிருந்த லாரி மற்றும் பொக்லைன் எந்திரத்தை போலீசார் மடக்கி பிடித்தனர்.
திருப்போரூர்:
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோவளம், குன்றுக்காடு பகுதியில் உள்ள கடற்கரையோரத்தில் உள்ள மணலை மர்ம நபர்கள் இரவு நேரங்களில் லாரிகள் மூலம் அள்ளி விற்பதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருப்போரூர் வட்டாட்சியர் ராஜன் உத்தரவின் பேரில் கேளம்பாக்கம் வருவாய் ஆய்வாளர், கோவளம் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் இரவு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குன்றுக்காடு கிராமத்தில் கடல் மணலை அள்ளிக்கொண்டிருந்த லாரி மற்றும் பொக்லைன் எந்திரத்தை மடக்கி பிடித்தனர்.
பின்னர் அதனை கேளம்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக லாரியின் உரிமையாளர் குன்றுக்காடு கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, லாரி டிரைவர் கோவளத்தைச் சேர்ந்த சுரேஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் இருவரும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.