தமிழ்நாடு

சென்னையில் 2 இடங்களில் ரெயில் என்ஜின், சரக்கு பெட்டி தடம் புரண்டது- நள்ளிரவில் ஏற்பட்ட விபத்தால் பாதிப்பு இல்லை

Published On 2024-02-15 04:28 GMT   |   Update On 2024-02-15 04:50 GMT
  • சென்ட்ரல் நிலையத்திற்கும்-பேசின் பாலத்திற்கும் இடையே உள்ள யார்டில் இரவு 11.30 மணி அளவில் ரெயில் என்ஜின் ஒன்று தடம் புரண்டது.
  • யார்டில் தடம் புரண்ட என்ஜினை விரைவாக மீட்கும் பணி நடந்தது. அங்கு மேற்கொள்ளப்பட்ட பணிகள் காலையில் முடிந்தன.

சென்னை:

சென்னையில் ஒரே நாளில் 2 ரெயில் விபத்துகள் நடந்தன. டீசல் ஏற்ற வந்த காலி ரெயில் பெட்டியும், ரெயில் என்ஜின் ஒன்றும் தடம் புரண்டதில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தால் மீட்பு பணிகள் விடிய விடிய நடந்தன.

சென்னை தண்டையார் பேட்டையில் ஐ.ஓ.சி-க்கு சொந்தமான எண்ணை கிடங்குகள் உள்ளன. அங்கிருந்து சரக்கு ரெயில் மூலம் டீசல், பெட்ரோல் நிரப்பப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அதிகாலை 2.30 மணி யளவில் பெட்ரோல் ஏற்ற யார்டுக்கு பெட்டிகள் கொண்டு வரப்பட்டன. அப்போது 2 பெட்டிகள் தடம் புரண்டன. 4 சக்கரங்கள் தண்டவாளத்தைவிட்டு கீழே இறங்கின.

இதையடுத்து உடனே ரெயில் நிறுத்தப்பட்டது. இதுபற்றி அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தடம் புரண்ட சரக்கு காலி பெட்டிகளால் ரெயில் போக்குவரத்து பாதிப்பு இல்லை. ஆனாலும் விடிய, விடிய மீட்பு பணிகள் நடந்தன. காலை 7 மணிக்கு சரி செய்யப்பட்டு யார்டுக்கு பெட்டிகள் கொண்டு செல்லப் பட்டன.

இதேபோல சென்ட்ரல் நிலையத்திற்கும்-பேசின் பாலத்திற்கும் இடையே உள்ள யார்டில் இரவு 11.30 மணி அளவில் ரெயில் என்ஜின் ஒன்று தடம் புரண்டது.

யார்டில் இருந்து என்ஜின் வெளியே வந்தபோது தண்டவாளத்தைவிட்டு இறங்கியது. இதனால் யார்டில் இருந்து ரெயில்கள் வெளியே வருவதில் சிரமம் ஏற்பட்டது. யார்டில் தடம் புரண்ட என்ஜினை விரைவாக மீட்கும் பணி நடந்தது. அங்கு மேற்கொள்ளப்பட்ட பணிகள் காலையில் முடிந்தன.

இந்த 2 ரெயில் விபத்தாலும் அடுத்தடுத்து நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News