தமிழ்நாடு

போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ்

Published On 2024-01-10 10:11 GMT   |   Update On 2024-01-10 10:11 GMT
  • பண்டிகை நேரத்தில் இந்த வேலை நிறுத்தம் அவசியமா? இந்த போராட்டத்தால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்.
  • பணிக்கு திரும்பும் போக்குவரத்து தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

சென்னை:

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று காலை விசாரித்த நீதிமன்றம், ''போராட்டம் நடத்த உரிமை இல்லை என்று கூறவில்லை. தற்போதைய பண்டிகை நேரத்தில் அந்த போராட்டத்தை நடத்துவது முறையற்றது என்று தான் கூறுகிறோம்.

பண்டிகை நேரத்தில் இந்த வேலை நிறுத்தம் அவசியமா? இந்த போராட்டத்தால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் மிகப்பெரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையின் போது பொதுமக்களுக்கு ஏன் இடையூறு ஏற்படுத்த வேண்டும்? நகரங்களில் உள்ள மக்கள் அதிகம் பாதிக்கப்படவில்லை என்றாலும், கிராமத்திற்கு செல்லக்கூடிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அரசும் சரி, போக்குவரத்து தொழிற்சங்கங்களும் சரி ஏன் இந்த விவகாரத்தில் பிடிவாதமாக இருக்கிறீர்கள்? இந்த விவகாரத்தில் தீர்வு காண்பதில் என்ன பிரச்சனை உள்ளது? என்று கேள்வி எழுப்பினர்.

பின்னர் ஓய்வூதியதாரர்களுக்கும், ஊழியர்களுக்கும் ஜனவரி மாத பண பலன்களை அளிக்க முடியுமா? ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி வழங்குவது குறித்து தமிழ்நாடு அரசு பிற்பகலுக்குள் பதில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை பிற்பகலுக்கு தள்ளிவைத்தனர்.

மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகவும், ஜனவரி 19-ந்தேதி வரை வேலைநிறுத்த போராட்டத்தை ஒத்திவைப்பதாக தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் வேலை நிறுத்தத்தை நிறுத்தி வைத்து பணிக்கு திருப்பவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பணிக்கு திரும்பும் போக்குவரத்து தொழிலாளர்களை அனுமதிக்க அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் பணிக்கு திரும்பும் போக்குவரத்து தொழிலாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது என தெரிவித்தனர்.

Tags:    

Similar News